சென்னை: நடப்பு (2022-23) நிதியாண்டில் ரூ.1500 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 25சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மத்தியஅரசின் வலியுறுத்தல் காரணமாகவே வரியை உயர்த்தி இருப்பதாக அமைச்சர் நேரு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் தொழில் வரியை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள், இணையதளம் மூலம் மாநகராட்சி வசூல் செய்து வருகிறது.

2020-2021ஆம் நிதியாண்டு சொத்து வரி ரூ. 470 கோடியும், தொழில் வரி ரூ. 447 கோடியும் மாநகராட்சியால் வசூலிக்கப்பட்டுள்ளது.  2021-22ஆம் நிதியாண்டில் ரூ.1,240 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 35 விழுக்காடு கூடுதலாக வரி வசூலாகியுள்ளது.

2021-22ஆம் நிதியாண்டு மட்டும் சொத்து வரி ரூ. 778 கோடியும், தொழில் வரி ரூ. 462 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மொத்தம் ரூ. 234 கோடி வசூலிக்க வேண்டிய வரித்தொகை நிலுவையில் உள்ளது. இதில் அதிகபட்சமாக பிரபல நட்சத்திர ஹோட்டல்கள் இன்னும் சொத்து வரி செலுத்தாமல் இருந்து வருகிறது.

நடப்பு நிதியாண்டின் (2022-23) முதல் ஆறு மாதத்திற்கான வரியை ஏப்ரல் 15க்குள் செலுத்தினால் 5 விழுக்காடு தொகை சலுகையாக திருப்பி வழங்கவும், 2022-23ஆம் நிதியாண்டில் 1500 கோடி ரூபாய் வரி வசூலிக்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இவ்வாறு கூறியுள்ளது.