சென்னை:
மிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில்  43 நாட்களுக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், முதல்நாளில் ரூ.150 கோடி அளவுக்கு மது விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், அரசு நிறுவனமான, ‘டாஸ்மாக்’ மட்டுமே, சில்லரை கடைகள் வாயிலாக, பீர், பிராந்தி உள்பட பல்வேறு வகையான  மது வகைகளை விற்பனை செய்கிறது. இவற்றின் மூலம் தினசரி  80 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெறும்.
வார மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில், 100 கோடி ரூபாய்க்கும், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற நாட்களில் 100 கோடி முதல் 150 கோடி வரை விற்பனையாகும்.
இந்த நிலையில், இன்று 40 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் மட்டும் மது விற்பனை 150 கோடியை தாண்டி இருப்பதாக டாஸ்மாக் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையிலும் இன்று கடைகள் திறந்திருந்தால் மதுவிற்பனை கர்நாடகா விற்பனையை மிஞ்சி ரூ.200 கோடியை தாண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முதல்கட்டமாக மார்ச் 24ந்தேதி முதல் ஏப்ரல் 14ந்தேதி 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அன்றுமுதல் கல்வி நிறுவனங்கள் முதல்  அனைத்து தொழிற்நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், போக்குவரத்து என அனைத்தும் முடங்கியது.
ஆனால், கொரோனா பரவல் குறையாத நிலையில், 2வது கட்டமாக ஊரடங்கு  மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  இருந்தாலும் கொரோனா வைரஸ் தாக்கம்  தமிழகம் உள்பட  பல மாநிலங்களில்  தாக்கம் குறையாததால்,  ஊரடங்கு 3வது முறையாக மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டு, மே 17ந்தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் மே 4ந்தேதி முதல் தொழிற்நிறுவனங்கள் செயல்படவும், கடைகள் திறக்கவும் கட்டுப்பாடுகளுடன் தளர்வு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று முதல் (மே 7ந்தேதி) சென்னை மற்றும்  கொரோனா பாதிப்பு மண்டலங்கள் தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகஅரசு உத்தரவிட்டது.
அதன்படி ஆதார்எண் அடையாளத்தைக் காட்டி, டோகன் பெற்று, சமூக விலகல் கடைபிடித்து மது பாட்டில்கள் வாங்கிச்செல்ல அறிவுறுத்தப்பட்டது. மேலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
இதனால் குஷியடைந்த குடிமகன்கள் நேற்று இரவே டாஸ்மாக் கடைகளை சுற்றி வரத் தொடங்கி னர். பல கடைகள் வாழைஇழை தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இன்று அதிகாலையிலேயே பலர்  மதுபானக்கடைகள் முன்பு குவியத் தொடங்கினர். முதலில் டோக்கன் பெறப்போவது யார் என்று பல இடங்களில் போட்டியே நிலவியது.
குடிமகன்களை சமூக விலகலை கடைபிடித்து வரிசையில் நிற்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டும் பல இடங்களில் அதை கண்டுகொள்ளாமல் எப்போதுபோல முண்டியடித்துக் கொண்டே மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். சில இடங்களில் சமூக விலகளுடன் மதுக்களை வாங்கிச் சென்றனர்.  இதனால் சில இடங்களில 2 கி.மீட்டர் தூரம் வரை லைன் தொடர்ந்தது.
பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க வந்த, ஊழியர்களை குடிமகன்கள் கைதட்டி வரவேற்ற நிகழ்வுகளும் அரங்கேறின.
சரியாக காலை 10மணிக்கு கடை திறந்ததும்,  மதுப்பிரியர்கள் சிரித்த முகத்துடன், குறைந்தது ஆளுக்கு 2 பாட்டில்களை வாங்கிக்கொண்டு உற்சாக நடனத்துடன் மறைந்து சென்றனர்.
மது வாங்க குடிமகன்களின் கூட்டம் அதிகரித்த நிலையில் சில கடைகளில் மதுபானங்கள் விற்று தீர்ந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த குடி மகன்கள்  மற்ற கடைகளை நோக்கி விரைந்தனர்.
இன்றைய ஒரே நாளில் மட்டும் சென்னை தவிர்த்து ரூ.150 அகோடி அளவுக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.