சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து 15.20 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், பரிசுபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி கடந்த பிப்ரவரி 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
அதன் காரணமாக கட்சி சின்னங்கள், கட்சி தலைவர் சிலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கட்சி சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டுதல், கட்சி சார்பில் பரிசு பொருட்கள் அளித்தல் ஆகிய செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் 6 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் ஆவணங்களின்றி பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை தேர்தல் பறக்கும் படை கைப்பற்றியுள்ளது.
கடந்த 6 நாட்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பரிசு பொருட்களின் மொத்த மதிப்பு 15.20 கோடி ரூபாய் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.