சென்னை:
பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க ரூ.1,321 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கொரோனா சோதனைக்கு பிசிஆர் பரிசோதனை கருவிகளை மத்திய அரசு கூடுதலாக வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு 2வது கட்டமாக மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து, பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளதாக கூறப்படுகறது. அதன் விவரங்களை பிரதமர் அலுவலகத்துக்கு ஃபேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்தி யதுடன், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க ரூ.1,321 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா பரிசோதனைகளுக்காக கூடுதலாக பிசிஆர் கருவிகள் உடனே அனுப்பி வைக்க வேண்டும்
சிறு, குறு தொழில் துறையினர் பெற்றுள்ள கடன்களுக்கு வட்டியை 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்,
சிறு, குறி தொழில் செய்வோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஜிஎஸ்டி வருமான வரி செலுத்த 6 மாத கால அவகாசம் வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், பீலா ராஜேஷ், அமைச்சர் உதயகுமார் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.