சென்னை; சென்னையை அடுத்த செங்கல்பட்டில், ரூ.130 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் டிசம்பரில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, பணிகள் 75 சதவிகிதம் அளவுக்கு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் புறநகர் மாவட்டங்களில் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம். மாவட்டத்தின் தலைநகரான செங்கல்பட்டில் நகர் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையம் இட நெருக்கடியால் சிக்கி தவித்து வந்தது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐடி நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் வந்துகொண்டிருப்பதால், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
இந்தநிலையில், செங்கல்பட்டு பேருந்து நிலையத்தை பிரமாண்டமாக அமைக்க திமுக அரசு முடிவு செய்து, அதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, செங்கல்பட்டில் கடந்த 1989 ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. தற்போது அதிகரித்து வரும் மக்கள் நெருக்கம், பேருந்துகள் எண்ணிக்கை அதிகாரிப்பு காரணமாக, பேருந்து நிலையம் மக்கள் நெரிசலிலும், வாகன நெரிசலிலும் சிக்கி தகவித்தது. மேலும், இங்கிருந்து, அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளும் காஞ்சிபுரம், மதுராந்தகம், தாம்பரம், திருப்பதி, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, செங்கல்பட்டு புறநகர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளில் தமிழக அரசு இறங்கியது. செங்கல்பட்டு ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடி வேண்பாக்கம் கிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான சுமார் 40,274 சதுர மீட்டரில் (சுமார் பத்து ஏக்கர் பரப்பளவு) பிரமாண்டமான புதிய பேருந்து நிலையம் அமைய முடிவு செய்யப்பட்டது.
இந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் சுமார் 61 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதியுடனும், 44 நடைமேடைகளுடனும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தரைத்தளம், முதல் மற்றும் 2 ஆம் தளத்துடன் கூடிய முனைய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 936 சதுர மீட்டர் பரப்பளவில் எரிபொருள் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 130 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 70% சதவீதம் நிறைவடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முக்கிய பணிகள் முடிக்கப்பட்டு வருகின்ற டிசம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பேருந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளனர்.
2021 ஜனவரி பொங்கல் பண்டிகையிலிருந்து செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து, தென் மாவட்டத்திற்கும் பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.