சென்னை: இலங்கை மக்களுக்கு மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் சந்தித்து நிதி வழங்கினர்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில்,  உணவு மற்றும் அடிப்படைத் தேவைப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அங்கு பசி பட்டினியால் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் மனிதாபிமான அடிப்படையில் நிதி மற்றும் பொருளுதவி அளிக்கப் போவதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதற்காக தாராளமாக உதவும்படியும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ உள்பட மதிமுக தலைவர்கள்  தலைமைச் செயலகத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது மதிமுக சார்பில்  5 லட்சம் ரூபாய்,  வைகோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ஆகியோரது ஒரு மாத ஊதியமான தலா 2 இலட்சம் ரூபாய், 3 சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியமான தலா 1,05,000 ரூபாய் மேலும் ஒருவரது ஒரு லட்சம் ரூபாயும் என மொத்தமாக 13 லட்சத்து 15ஆயிரம் ரூபாய், இலங்கை மக்களுக்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சரிடம் காசோலை மற்றும் வரைவோலையாக வழங்கப்பட்டது.

முதல்வருடன் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் இருந்தனர்.

[youtube-feed feed=1]