சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தேர்தல் அறிக்கைப்படி கல்விக் கடன்களையும், விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்துள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ரூ.12,110.74 கோடி அளவிலான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், இதற்கு முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.12,110.74 கோடி கூட்டுறவு பயிர்க்கடனை தள்ளுபடி செய்தோம் என்று கொஞ்சம் கூடக் கூசாமல் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் அமைச்சர். திமுகவில் அமைச்சராவதற்கு முதல் தகுதியே, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் என்பதை தனது அறிக்கை மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் பெரிய கருப்பன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற வுடன் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு எண்.33-ல் தெரிவித்துள்ளபடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன் மற்றும் நகை கடன்களை தள்ளுபடி செய்து அவற்றிற்கு போதிய நிதியை முழுமையாக ஒதுக்கீடு செய்து அவர்கள் பெற்ற கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்தது முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க அரசுதான் என கூறியுள்ளார்.
மேலும் 31.01.2021 அன்று வரை கூட்டுறவு சங்கங்களின் சிறு. குறு விவசாயிகள் 16,43,347 நபர்கள் பெற்றிருந்த பயிர்கடன்கள் ரூ.12,110.74 கோடி அளவிலான தள்ளுபடிக்கான தொகையை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தின் நிதிநிலை கடந்த கால அரசால் கஜானா காலி செய்த நிலையிலும் விவசாயிகள் பாதிக்கப்பட கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு அதற்கு நிதி ஒதுக்கி விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாய பெருங்குடி மக்களின் வாழ்கையை காப்பாற்றியது தளபதி அவர்கள் தலைமையிலான கழக அரசு தான்.
மேலும் அரசு பொறுப்பேற்ற பின் 2021-2022 ஆம் ஆண்டில் முதல்முறையாக ரூ.10.635.37 கோடி பயிர் கடன்களை 15.44,679 விவசாயிகளுக்கு வழங்கியது. 31-03-2025 வரை நான்கு ஆண்டு காலத்தில் ரூ.61007.65 கோடி கடன்களை 79,18,350 விவாசய பெருமக்களுக்கு கடனாக பயிர் வழங்கியுள்ளது. விவசாய பெருமக்களை ஊக்குவிக்கும் விதமாக பயிர்கடன்களை குறிப்பிட்ட காலத்திற்குள் முறையாக திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை தமிழக அரசே செலுத்தி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் விவசாய கடன்களுக்கு மறு நிதி அளிக்கும். ஆனால், தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நபார்டு வங்கி கடந்த காலத்தில் மறு நிதி அளிப்பதை வெகுவாக குறைத்துள்ளதாக கூறியுள்ளார்.
இருந்த போதிலும் தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு கடன் அதிக அளவில் வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தமிழக நிதியை வழங்கி எப்பொழுதும் இல்லாத அளவில் பயிர்கடன்கள் அதிக அளவில் விவசாய பெருமக்களுக்கு இவ்வரசு வழங்கி வருவதாகவும், கிராமபுற மக்கள் பயன் பெறும் வகையில் கடன் திட்டங்களையும், சேமிப்புகளை ஊக்குவிக்கின்ற வகையில் சிறந்த சேமிப்பு திட்டங்களையும் கூட்டுறவு வங்கிகள் வழங்கி வருகிறது. விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் உரம் மற்றும் விதைகள் போன்றவை தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் மானிய விலையில் தரமானதாகவும் வழங்கி வருகிறது.
இவ்வாறு பெரியகருப்பன் கூறியுள்ளார்.
முன்னதாக, பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், இதற்கு முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.12,110.74 கோடி கூட்டுறவு பயிர்க் கடனை தள்ளுபடி செய்தோம் என்று கொஞ்சம் கூடக் கூசாமல் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன் என சாடியிருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயிர்க் கடன் தள்ளுபடி என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று நாங்கள் நேற்று அறிக்கை வாயிலாக எழுப்பிய கேள்விக்கு, ஊர் உறங்கிய பின்னர், நள்ளிரவில் பதிலளித்து இருக்கிறார் அமைச்சர் பெரியகருப்பன். திமுக ஆட்சியில் விடியாது என்பதில், அமைச்சருக்கு அத்தனை நம்பிக்கை.
கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், இதற்கு முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டிருந்த ரூ.12,110.74 கோடி கூட்டுறவு பயிர்க் கடனை தள்ளுபடி செய்தோம் என்று கொஞ்சம் கூடக் கூசாமல் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் அமைச்சர். திமுகவில் அமைச்சராவதற்கு முதல் தகுதியே, பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதுதான் என்பதை தனது அறிக்கை மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள கொள்கைக் குறிப்பிலேயே, கடந்த 2021-2022 முதல் 2023-2024 வரை, தள்ளுபடி செய்யப்பட்ட கூட்டுறவு பயிர்க் கடன் ரூ.4,455.37 கோடி மற்றும் நிலுவையில் இருக்கும் கடனுக்கான வட்டித் தொகை ரூ.1,430.27 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இதை எப்படிக் கூட்டினாலும், அமைச்சர் கூறும் ரூ.12,110.74 கோடி வரவில்லை. நபார்டு வங்கி மறு நிதியை எல்லாம் கணக்கில் காட்டி சமாளிக்க முயன்று தோற்றிருக்கிறார் அமைச்சர். கணிதப் பாடத்தில், முதல்வர் முதற்கொண்டு திமுகவினர் எத்தனை திறமையானவர்கள் என்பதைத் தமிழக மக்கள் அறிவார்கள். அப்படி இருக்கையில், இப்படி ஒரு பொய் சொல்ல வெட்கமாக இல்லையா அமைச்சர் அவர்களே ?
நான்கு ஆண்டு கால டிராமா மாடல் ஆட்சியில், விவசாயிகளுக்குச் செய்த திட்டங்களாகப் பட்டியலிட்டிருக்கும் அமைச்சர், விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு, டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்துப் போராடிய 11,000 விவசாயிகள் மீது வழக்கு போன்றவற்றையும் சேர்த்திருந்தால், அந்தப் பட்டியல் நிறைவு பெற்றிருக்கும். நகைக் கடன், கல்விக் கடன், பயிர்க் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, பொதுமக்களைக் கடனாளியாக்கிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் கண் துடைப்புக்காக சிறிய அளவில் தள்ளுபடி செய்து மக்களை ஏமாற்றுவதைக் கேள்வி கேட்டால், உங்களுக்கு கோபம் வேறு வருகிறதா ?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.