சென்னை: ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டும், ஆண்டுக்கு ரூ.12 கோடி வருவாய் ஈட்டும் கோயம்பேடு மார்க்கெட்டை “காலி” பண்ண தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கு பதிலாக, திருமழிசை பகுதியில் மார்க்கெட் அமைக்க திட்டமிடும் தமிழ்நாடு அரசு, கோயம்பேடு பகுதியில், மெகா மால் உள்பட ஆடம்பர ஓட்டல் மற்றும் பொழுதுபோக்கு வணிகமயமாக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுமார் 295 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் கோயம்பேடு சந்தையில் 3 ஆயிரத்து 941 கடைகள் உள்ளன. இந்த சந்தையை நம்பி ஆயிரக்கணக்கான வணிகர்கள், ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் பொது மக்களும் இந்த சந்தை மூலம் பலன் பெற்று வருகிறது.
இந்த சந்தையில், சாதாரண நாள்களில் குறைந்த பட்சம் 5 ஆயிரம் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாகும், இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 30 முதல் 35 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஆயிரக்கணக்கானோரின் வருவாய் ஆதாரமாகத் திகழ்ந்த கோயம்பேடு சந்தையை மூட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியின்போதும், கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு மாற்றிவிட்டு, அங்கு பிரபலமான அடுக்குமாடி வீடுகள், மால்கள் கட்ட திட்டமிடப்பட்டதாக தகவல்கள் பரவின. ஆனால், தற்போதைய திமுக அரசும், அதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது.
கோயம்பேடுமொத்த விற்பனை சந்தையை, ஆடம்பரமான அலுவலக இடங்களை அமைப்பதற்கான வணிக மையமாக மாற்ற, திமுக அரசு விரும்புகிறது. இதில், 85 ஏக்கர் சந்தை வளாகத்தை அலுவலக இடங்கள், சில்லறை வணிக வளாகம், பல்நோக்கு விளையாட்டு வசதி மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமைப்பதற்கான வணிக மையமாக மாற்ற CMDA திட்டமிட்டுள்ளது. மேலும், பல்நோக்கு விளையாட்டு வசதி மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல், அடுக்கு மாடி குடியிருப்புகள், மால்கள் என பல வசதிகளுடன் கூடிய ஆடம்பர வணிக மையமாக மாற்ற சிஎம்டிஎ முடிவு செய்துள்ளது.
நகரத்தின் மையப்பகுதியிலும் அமைந்துள்ள கோயம்பேடு சந்தை அமைந்துள்ள இடம் இன்றைய மதிப்பீட்டில் ஆயிரம் கோடிகளுக்கு மேலான ரூபாய் மதிப்புடையது. இவ்வளவு பெரிய, விஸ்தாரமான இடத்தை, அரசு கைப்பற்றினால் என்ன என ஆட்சியாளர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதனால், ஆசியாவின் மிகப்பெரிய சந்தை மையமான கோயம்பேடு சந்தை, அழிந்துபோகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது, கோயம்பேடு வணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கொரோனா காலக்கட்டத்தில், கொரோனா பரவலின் கிளஸ்டராக கோயம்பேடு சந்தை மாறியதால், தற்காலிகமாக கோயம்பேடு சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. அங்கும், கோயம்பேடு மார்க்கெட் போலவே, தற்போது திருமழிசையிலும், 4 பிரிவுகளாக கடைகள் பிரிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, ஏ பிரிவில் 58 கடைகள், பி பிரிவில் 31 கடைகள், சி பிரிவில் 60 கடைகள், டி பிரிவில் 51 கடைகள் என விற்பனை நடைபெற்றது. அந்த இடத்தையே, நிரந்தர சந்தையாக மாற்ற சிஎம்டிஏ முடிவு செய்துள்ளது. இதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தால் (சிஎம்டிஏ) நியமிக்கப்பட்ட உலகளாவிய ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான குஷ்மேன் மற்றும் வேக்ஃபீல்ட், ‘கோயம்பேடு மொத்த சந்தை வளாகத்தை மறுவடிவமைப்பு செய்தல் மற்றும் சிறந்த பயன்பாட்டு விருப்பத்தை அடையாளம் காண்பது’ குறித்த முன் சாத்தியக்கூறு அறிக்கையைத் தயாரித்து வழங்கி உள்ளது. அதில், கோயம்பேடு சந்தையை மாற்ற பரிந்துரைத்துள்ளது. இந்த சந்தையை முற்றிலும் சென்னையின் புறநகரில் உள்ள திருமழிசைக்கு மாற்றலாம் என ஆலோசனை தெரிவித்து உள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு கனரக வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் நடமாட்டம் காரணமாக மிகவும் நெரிசலான கோயம்பேடுவை சில்லறை மற்றும் விருந்தோம்பல் இடமாக மாற்றலாம் என்றும், மென்பொருள் நிறுவனங்கள் உள்பட பல்வேறு அதிக வருவாய் வரும் நிறுவனங்களுக்கு தாரைவார்த்தால் வருமானம் அதிகம் ஈட்டலாம், அவ்வாறு மாற்றினால், கோயம்பேடு, “ஒரு முக்கிய வணிக வளாகமாகவும், சில்லறை விற்பனை மற்றும் விருந்தோம்பல் இடமாக மாறும் என்று தெரிவித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை ஈர்க்கும்” என்று அறிக்கை கூறுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் சேவையின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தை இணைக்கும் போக்குவரத்து மையமாக உருவாகி வரும் கோயம்பேடு நகரின் செங்குத்து வளர்ச்சியை அரசாங்கம் கவனித்து வருவதாகவும், தற்போது சிஎம்டிஏவால் பராமரிக்கப்படும் சந்தை, வசதியைப் பராமரிப்பதற்கு வெறும் 2% மொத்த வரம்பைப் பெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கோயம்பேடு சந்தை ஆண்டுக்கு சராசரியாக 12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. முக்கியமாக நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் மற்றும் பொதுவான பகுதிகளை பராமரித்தல் ஆகியவை CMDA க்கு முக்கிய வருவாய் ஆதாரங்கள் என்று தெரிவித்துள்ள அறிக்கை, இந்த வருமானத்தில், ஆண்டு செலவு ரூ.11.70 கோடி செலவிடப்படுவதாகவும், வெறும் ரூ.30 லட்சமே லாபம் கிடைப்பதாகவும், அதனால் அதிக லாபத்தை பெறும் வகையில் ஆடம்பர வணிகமயமாக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.
காலத்திற்கேற்ப, “நிலத்தை மிகவும் திறம்பட பயன்படுத்துதல், சிறந்த சந்தை செயல்பாடு மற்றும் திறமையான தயாரிப்பு கலவை மற்றும் சந்தை நடவடிக்கைகளின் நவீனமயமாக்கல் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதற்கான வழிகளை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேடு உட்பட நகரின் வடமேற்குப் பகுதிகளில் புதிய வளர்ச்சி எதுவும் இல்லை என்று அறிக்கை கூறுகிறது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான அலுவலக இடங்கள் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் பழமையானவை. அலுவலகப் பங்குகளில் 5% மட்டுமே வடமேற்குப் பகுதிகளில் உள்ளது, தெற்குப் பகுதிகளில் 35% உள்ளது. வடமேற்கில் சராசரி மாத வாடகை சதுர அடிக்கு ரூ.35-50 மட்டுமே என்றாலும், நகரின் மற்ற மைக்ரோ மார்க்கெட்களில் சதுர அடிக்கு ரூ.80-100 ஆக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது.
மேலும், திட்டத்தின்படி, கோயம்பேடு சந்தை அமைந்துள்ள பகுதிகளில், 35% நிலப்பரப்பு அல்லது 29.75 ஏக்கர் திறந்தவெளிகள், பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் விளையாட்டு மைதானங் கள் மற்றும் சாலைகள் அமைக்க ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
அத்துடன், 30 முதல் 50 ஏக்கரில் வணிக வளாகங்கள் கட்டப்படும், மீதமுள்ள நிலம் எதிர்கால வளர்ச்சிக்காக தக்கவைக்கப்படும் என தெரிவித்துள்ளது. கோயம்பேடு சந்தையை மாற்றினால் மட்டுமே இதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், தேவைகள் போக, மீதமுள்ள இடங்கள் வணிகர்களுக்கு நலனுக்காக ஒரு பகுதியாக பயன்படுத்த வும் திட்டமிடப்பட்டுள்ளது..
தற்போதைய நிலையில், கோயம்பேடு சந்தையில் உள்ள பெரும்பாலான கடைகள் வியாபாரிகளுக்குச் சொந்தமானவை என்பதால், அவற்றை திருமழிசை சந்தைக்கு மாற்றுவதற்கு ஏற்ப, வணிகர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. மேலும், வணிகர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், திருமழிசையில் உள்ள புதிய இடத்திற்கு தானாக முன்வந்து செல்ல அவர்களை ஊக்குவிக்கவும் ஒரு திட்டத்தைக் அறிவிக்க தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாகவும், வணிகர்களை வெளியேறச் செய்ய, அரசு பணம் கொடுக்க வேண்டும் என்பதால், அதுதொடர்பாக சிஎம்டிஏ மற்றும் தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோயம்பேடு மார்க்கெட்டை கைப்பற்ற கடந்த அதிமுக ஆட்சியின்போதும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது திமுக அரசு, அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
இலவசங்களை வாரியிறைத்து, மக்களை மயக்கி வரும் தமிழ்நாடு அரசு, ஏற்கனவே டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்து, மக்களை குடிகாரர்களாக்கி கல்லா கட்டி வரும் நிலையில், பல ஆயிரக்கணக்கான வணிகர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கண்டு கொள்ளாமல், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கும் என்ற நோக்கத்திலும், அதே வேளையில் தாங்களும் புறவாசல் வழியாக கோடிக்கணக்கான ரூபாயை அள்ள முடியும் என கணக்குப்போட்டு, ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட்டான கோயம்பேடு மார்க்கெட்டை காலி செய்யும் சதுரங்க வேட்டையில் ஈடுபட்டுள்ளது.