சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து,  கே.பி அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்பான அலுவலகங்கள் மற்றும், தர்மபுரி மற்றும் சென்னை, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில்  200க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள்  எஸ். பி. வேலுமணி, தங்கமணி, கே .சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கே.பி. அன்பழகன் மற்றும் அவரது மனைவி, 2 மகன்கள், மருமகள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டுளள்து. கே.பி.அன்பழகன் 2016-21 ம் ஆண்டில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக  ரூ.11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கே.பி.அன்பழகன் மீது மட்டும் அல்லாது அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன் மற்றும் மருமகள் வைஸ்னவி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  உயர்நீதிமன்ற உத்தரவுபடியே லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை முதல் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கணேஷ் கிரானைட் அலுவலகம் உட்பட 3 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், கிருஷ்ணகிரி, சேலம் உள்பட மொத்தம் 57 இடங்களில் சோதனை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும்,  தர்மபுரி அரூர் அடுத்த செக்காம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், காலை, 5.00 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர். முன்னாள் அமைச்சர் அன்பழகன் பினாமி பெயரில் இந்த பள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. இது போல் பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ., கோவிந்த்சாமி வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் கரிம்நகரில் உள்ள அன்பழகனும் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் அடுத்தடுத்து காவல்துறையினர் ரெய்டு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.