சென்னை,

மிழக திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1083 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு கூறியுள்ளார்.

தமிழகத்தில்  பிரதமரின் வீட்டு வசதி திட்டம், வறுமை ஒழிப்பு உள்பட 3 திட்டங்களை செயல் படுத்த ரூ.1083 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.

நேற்று சென்னையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்துவிட்டு,  சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசின் நகர்புற மற்றும் உள்ளாட்சி துறை திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையில் அமைச்சர் வேலுமணி தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு மத்தியஅமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 3 திட்டங்களை நிறைவேற்ற ரூ.1083 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அனுதியை  வாங்கியுள்ளோம் என்றார்.

இந்த 3 திட்டங்களில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.663.93 கோடி, தீன்தயாள் அந்தியோதயா யோஜனா திட்டத்துக்கு ரூ.59.14 கோடி, அம்ருத் திட்டத்துக்காக ரூ.360.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், நிதி ஆயோக் மன்றத்தின் ஆலோசனையின் பேரில், திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு 20 சதவீதம் ஊக்க ஊதியம் வழங்குவதாகவும், அதற்காக இன்னும் 20 சதவீதம் வழங்க உள்ளதாகவும், இதற்காக மாநில அரசுகள், மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த தங்கள் பங்களிப்பை அதிகரித்து மத்திய அரசின் நிதியை பெற முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.

தற்போது ஸ்வச் பாரத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.160 கோடி வழங்கியுள்ளது மேலும், கூடுதல் நிதி வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றும், இதற்காக  இன்னும் ரூ.500 கோடி தயார் நிலையில் உள்ளது என்று கூறினார்.

மத்திய அரசின்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்க மேலும் 12 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது, இதில்  முதல்கட்டமாக நடத்தப்பட்ட தகுதிச் சுற்றில் சென்னை, கோவை இடம் பிடித்துள்ளன.

இரண்டாவது சுற்றில் மதுரை, தஞ்சாவூர், வேலூர், சேலம் ஆகியவை இடம் பிடித்துள்ளன.

இதுதவிர 3ம்கட்ட தகுதிச்சுற்றில் தேசிய அளவிலான போட்டியில் மற்றவை தேர்வு செய்யப்படும் என்றும்,  இந்த திட்டத்துக்கு ரூ.828 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.376 கோடி சென்னைக்கும், கோவைக்கும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற நகரங்களுக்கு ரூ.428 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு 666 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 808 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும்,  இதில் மத்திய, மாநில அரசுகளின் நிதியாக ரூ.3855 கோடி உள்ளது. திட்ட அனுமதி பெறுவதிலும், திட்டத்தை செயல்படுத்துவதிலும் தமிழகம் முதலிடமாக உள்ளது, இது தொடர வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் 9.76 லட்சம் வீடுகள் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. வீடு தேவைப்படுவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேவையை பொறுத்தவரையில் தமிழகத்தில் 9 மாவட்டத்தில் 70 சதவீத தேவை உள்ளது என்று கூறினார்.

மேலும், ஆலந்தூர், அம்பத்தூர் பகுதியில் அம்ருத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், அதற்காக  மொத்தம் ரூ.11237 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் குடிநீருக்காக 39 சதவீதமும், கழிவுநீர் வெளியேற்றுவது உள்ளிட்ட சுத்திகரிப்பு பணிகளுக்கு 47 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வெங்கையா தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் மாநில அரசுகள் தன் பங்குக்காக ரூ.591 கோடி வழங்கியுள்ளது. அம்ருத் திட்டத்தில் தமிழகத்தில் சென்னை, ஆலந்தூர், அம்பத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, தூத்துக்குடி உள்பட 33 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நகரங்களும் தரப்படுத்தப்பட வேண்டும் என்றும்,

தரப்படுத்துதலில் 10 நகரங்கள் தனியார் முதலீடு செய்ய தகுதியானவை என கணக்கிடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 664 நகர்ப்புறங்கள் உள்ளன. இவற்றில் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 23 நகர்ப்புறங்கள்தான் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாதவை. இதுகுறித்து மக்கள் மனநிலையில் மாற்றம் வந்தால்தான் திறந்த வெளி கழிப்பிடங்கள் ஒழியும். மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார்.