சென்னை: 2022-23ம் ஆண்டில் மின்திருட்டு காரணமாக ரூ.103 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் கடனில் தத்தளித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அரசியல் கட்சிகளின் இலவச மின்சாரம் மற்றும் மின் திருட்டுகள்தான். மின் திருட்டுக்களை தடுக்கவும், அது பற்றிய புகார்களை 04428412906 எனும் மின் வாரிய தலைமையக தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இருந்தாலும் மின் திருட்டுக்கள் தொடர்கின்றன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதைத் தடுக்க மின்வாரியம், கண்காணிப்பு டிஜிபி தலைமையில் அமலாக்கப் பிரிவை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தமிழக மின் துறை சார்பில், மின் 17 பறக்கும் படைகளும், 40க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களை கொண்ட மின்சார பாதுகாப்பு படைகளும், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இப்பிரிவில் உள்ள அதிகாரிகள் மின்திருட்டு தொடர்பாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த 2022-23-ம் ஆண்டில் 17,328 மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அபராதமாக ரூ.103 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சா வாரியம் தெரிவித்து உள்ளது.
கடந்த 2021-22-ல் 13,145 மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.80 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது. 2018-19-ல் 18,453 மின் திருட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு ரூ.106 கோடி வசூலிக்கப்பட்டது. தற்போது அபராதமாக ரூ.103 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சா வாரியம் தெரிவித்து உள்ளது.
மேலும், தற்போது விழாக்காலம் தொடங்கி உள்ளதால், கடைகள், வணிக நிறுவனங்களில் அலங்கார விளக்குகள் அமைக்கப்படும். அதேபோல், பல இடங்களில் சிறப்பு சந்தைகள் மற்றும் கண்காட்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த இடங்களில் முறைகேடாக மின்சாரம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அங்கெல்லாம் மின்திருட்டைத் தடுக்க கவனம் செலுத்துமாறு பொறியாளர்களை மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.