சென்னை:  வடகிழக்குப் பருவமழையை  எதிர்கொள்ள  446 பேரிடர் மீட்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாக  சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து, வங்கக்கடல் மற்றும் அரப்பிடலில் காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் மழை பெய்கிறது. மேலும் மழை தீவிரமடையலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி  தயாராக உள்ளது. இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 446 பேரிடர் மீட்பு வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்  நேரில் சென்று ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர்,  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஆங்காங்கே தேங்கும் மழை நீரை அகற்றுவதற்காக உயர்திறன் கொண்ட டீசல் இன்ஜின் மோட்டார் பம்புகள், எலக்ட்ரிக்கல் நீர்மூழ்கி மோட்டார் பம்புகள், பல்வேறு குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்புகள், டிராக்டர்களுடன் கூடிய மோட்டார் பம்புகள் என 845 மோட்டார் பம்புகள் சென்னை, ராயப்பேட்டை, லாயட்ஸ் காலனியில் செயல்பட்டு வரும் உர்பேசர் சுமீத் பணிமனை வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல வாகனங்களுடன் கூடிய மரம் அறுக்கும் இயந்திரங்கள், கையால் இயக்கப்படும் மர அறுவை கருவிகள், டெலஸ்கோபிக் புரூனர், கார்பேஜ் சக்கர்வாகனங்கள், ஆம்பிபியன் சூப்பர் சக்கர வாகனங்கள், ஜேசிபி இயந்திரங்கள், பாப்காட் இயந்திரங்கள், ரோபோடிக் பலவகைப் பயன்பாடு இயந்திரங்கள் உள்ளிட்ட 446 பேரிடர் மீட்பு வாகனங்களும், இயந்திரங்களும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன, இவற்றை முறையாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும்,   விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் கூடுதல் ஆணையர் ஆர்.லலிதா, திடக்கழிவு மேலாண்மை தலைமைப் பொறியாளர் என்.மகேசன், கண்காணிப்புப் பொறியாளர் ராஜேஸ்வரி, உர்பேசர் சுமீத் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மெஹ்மூத் செயட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.