திருவள்ளூர்: சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார். அதற்கான கடைசி நாள் இன்று.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்தாலும், 3வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் கடைபிடிக்கும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைத் தொடர்ந்தே 3வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக பிரபல மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதே வேளையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும் கொரோனா பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்கள் முக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஏராளமானோர் அரசு வழங்கிய தளர்வுகள் காரணமாக முக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். அதுபோல, தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களும், தங்களுக்கு இனிமேல் கொரோனா பாதிப்பு வராது என மெத்தனமாக முக்கவசம் அணியாமல் நடமாடுகின்றனர்.
ஆனால், மத்திய மாநலி அரசுகள், ஒவ்வொருவரும், தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டு மக்களிடையே வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் ஒருசில இடங்களில் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்காமல் இருப்பதை காண முடிகிறது.
இந்த நிலையில் கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
அதன்படி, மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிறந்த மீம்ஸ்களை உருவாக்குபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். அதன்படி, கொரோனா விழிப்புணர்வு தொடர்பான சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிற்கும் ரூ.1,000 வரை பரிசுத் தொகை வழங்கப்படும்.
மீம்ஸ்களை பதிவிட வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 18. மீம்ஸ் பதிவிடுபவர்கள் @TiruvallurCollr-ஐ டேக் செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.