புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 நிதிஉதவி வழங்கும் திட்டத்துக்கு மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வாங்கி உள்ளார். இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில், திமுக அரசு பதவி ஏற்பதற்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொரகை வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், நிதிநிலை காரணமாக, அது இன்னும் செயல்படுத்தாத நிலையில் உள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியை ஆண்டு வரும் ரங்கசாமி தலைமையிலான கூட்டணி மாநில அரசு, பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான கோப்பை தயாரித்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்த கோப்புக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கி உள்ளதாக மந்திரி தேனீ.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
புதுவை, அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 தர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மந்திரி கூறியுள்ளார். மேலும், புதுவை மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் அரசின் எந்தவிதமான மாதாந்திர உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் எப்போது அறிவிக்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.