சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையை வரும் 25ந்தேதி வரை நிறுத்திவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் முழு அலுவலகத்தையும் ஊழியர்களையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியுமா?’ என்றும் கேள்வி எழுப்பியது.
தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு தேவையான மது வகைகளை, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து டாஸ்மாக் நிறுவனம் வாங்கி விற்பனை செய்து வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இதுகுறித்து அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது,
‘டாஸ்மாக்’ நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸமாக் தலைமை அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் 3 நாட்கள் தொடர் சோதனை நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.
அதன்படி அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகள் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மதுபானங்கள் ரூ. 10 முதல் ரூ. 30 வரை கூடுதலாக வசூல் செய்தது தெரிய வந்துள்ளது.
மேலும், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது, கொள்முதல் விலையை குறைத்து காட்டியது. பணியிட மாற்றம், பார் உரிமம் உள்ளிட்டவைகளை பெற லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைமூலம் திமுக அரசை கடுமையாக விமச்ரனம் செய்து பாஜக உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. மேலும், இந் ஊழலில் முதல்வர் ஸ்டாலின்தான் முதல் குற்றவாதளி என்று கூறி வருகின்றன.
இந்த நிலையில், அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அந்த மனுக்களில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும்.
அமலாக்கத்துறையினர், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.
கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என். செந்தில்குமார் அமர்வில் விசாரிக்கப்பட்டது. விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அமலாக்கத்துறையினர்மீதுபல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினர்.
“சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டப்பிரிவு 17-ன் படி அமலாக்கத்துறை சோதனை அதிகாரம் குறித்து விளக்கியுள்ளது. ஆனால், சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
மேலும், “சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எந்த அதிகாரிக்கும் எதிராக ஆதாரம் இல்லை. அமலாக்கத்துறை பிரிவு 17ன் படி எல்லா இடங்களிலும், ஆதாரங்கள் இல்லாமல் விசாரணை நடத்த முடியுமா?
60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்டவிரோதமாக அமலாக்கத்துறையினர் சிறை பிடித்து வைத்துள்ளனர்” என்றும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அமலாக்கத்துறை வழக்கறிஞரிடம் பல்வேறு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டாஸ்மாக் நிறுவனத்தில் “எதற்காக சோதனை நடத்தப்படுகிறது என்பதை, அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தீர்களா?, இரவு நேரத்திலும் ஏன் சோதனை போட வேண்டும் என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில்கூறிய அமலாக்கத்துறை வழக்கறிஞர், , “இரவில் சோதனை நடக்கவில்லை. அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர். அரசு ஊழியர்கள் யாரையும் நாங்கள் சிறைபிடிக்கவில்லை; யாரையும் துன்புறுத்தவில்லை” என்று கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், “எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என்று தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும்? என கேள்வி எழுப்பியதுடன், அதற்கான அதிகாரம் அமலாக்கத்துறைக்கு இருந்தாலும், அதை செயல்படுத்திய விதம் தவறு என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த சோதனை நடத்த காரணமான, வழக்குகள், விவரங்கள் உள்ளிட்டவைகளை பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும்” என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறை வரும் 25ம் தேதி வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.