சென்னை: ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பாக,  டாஸ்மாக் இயக்குநர்  விசாகன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் வீடுகளில் 2வது நாளாக தொடரும்  அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதுபோல, தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும் 2வது நாளாக சோதனை தொடருகிறது.

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவது மற்றும் டாஸ்மாக்கில் குறிப்பிட்ட மதுபானங்களை மட்டும் விற்பது மற்றும் டாஸ்மாக்கில் கணக்கில் வராமல் மதுபானங்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த புகார்களின் அடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகளை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது.  அமலாக்கத்துறை விசாரணைக்கு டாஸ்மாக் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்காத நிலையில், நேற்று  (மே 16ந்தேதி) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் ரெய்டு நடவடிக்கையில் இறங்கினார்கள்.

‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் விசாகன் சென்னை மணப்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவருடைய வீட்டுக்கு நேற்று காலை 7 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 7பேர் சென்றார்கள். உடனடியாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விசாகன் வீட்டில் இல்லை. அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மட்டும் இருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் சோதனை நடந்தது. வெளியே சென்றிருந்த விசாகனும் சிறிது நேரத்திலேயே வீட்டுக்கு வந்தார். இதையடுத்து விசாகனிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

மற்றொருபுறம்,   அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் மேலும் 7 இடங்களில் நேற்று சோதனை நடத்தினார்கள். சென்னை தியாகராயநகரில் வசிக்கும் கேசவன் என்பரது வீடு, சூளைமேடு ராஜா வீதியில் உள்ள மேகநாதன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது.   இவர் மதுபான ஆலை நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

அவர்களுடன்,   பிரபல சினிமா பட அதிபர் ஆகாஷ் பாஸ்கரன் வசிக்கும் தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்த அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆகாஷ் பிரபல நடிகர்கள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.

இதேபோல் நேற்று சென்னை பெசன்ட்நகர் கற்பகம் கார்டன் 2-வது தெருவில் வசிக்கும் ராஜேஷ்குமார் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்தது. இவர் மின்சார வாரிய ஒப்பந்ததாரராக இருக்கிறார்.

இதேபோல் ராயப்பேட்டை கிளப் ஹவுஸ் சாலையில் உள்ள தொழிலதிபர் தேவகுமார் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சென்னை சேத்துப்பட்டு ஜெகநாதபுரத்தில் உள்ள பாபு, குமரன் காலனியில் உள்ள இந்திரஜித் ஆகியோரது வீடுகளிலும், பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இதற்கிடையே டாஸ்மாக் இயக்குனர்  விசாகன் வீட்டுக்கு பின்பக்கத்தில் ‘டாஸ்மாக்’ டெண்டர் தொடர்பான ஆவணத்தின் பல்வேறு நகல்கள் கிடந்தன. அவை சோதனை நடந்தபோது விசாகன் வீட்டில் இருந்து வெளியே வீசப்பட்டிருக்கலாம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை கண்டுபிடித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே சிதறி கிடந்த ஆவணங்களை சேகரித்து எடுத்து சென்றார்கள்.

இதையடுத்து, மேல் விசாரணைக்காக டாஸ்டாக் இயக்குனர் விசாகனை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பகல் 3 மணியளவில் தங்கள் காரில் ஏற்றி அழைத்து சென்றார்கள். நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து அவரிடம் மீண்டும் விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாகனை கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானதால் பரபரப்பு எழுந்தது.

நேற்றிரவு 8.45 மணி வரை விசாரணை முடிவடைந்த நிலையில், விசாகன் அமலாக்கத்துறை அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தார். இந்த நிலையில், இன்றும் அமலாக்கத்துறை சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக இன்று சோதனை நடத்தி வருகிறார்கள். அத்துடன்பிரபல சினிமா பட அதிபர் ஆகாஷ் பாஸ்கரன் வசிக்கும் தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கிழிந்த நிலையில் ஆவணங்கள் கண்டுபிடிப்பு: டாஸ்மாக் நிறுவஇயக்குனர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை….