சென்னை: ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றதாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளதை எதிர்த்து, தமிழ்நாடு தொடர்ந்துள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரிக்கிறது.
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, வழக்கில் இருந்து விலகிய நிலையில், புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டனர். அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,. அமலாக்கத்துறை அதிகாரிகள், 60 மணி நேரம் சோதனை நடத்தி பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால், மத்தியஅரசு வழக்கறிஞர், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறியது.
இதையடுத்து தமிழ்நாடு அரசிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தமிழக அரசு இரவு நேரத்தில் சோதனை நடத்தியது இல்லையா? என்றதுடன், மக்களுக்காக, ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து வாதங்கள் நடைபெற்று வருகிறது.