புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் இன்று கூடியது. இன்று மாநிலத்தின் முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி, மாணாக்கர்களுக்கு இலவச லேப்டாக் உள்பட பல்வேறு அறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முழுமையான பட்ஜெட்,. மத்தியஅரசு ஒப்புதலுடன் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் என்.ரங்கசாமி,2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதிநிலை அறிக்கையை காலை 9.45 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். நிகழாண்டு ரூ.10,670 கோடிக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும். 21 வயதுக்கு மேல் 55 வயதிற்குள் இருக்கும் அரசின் எந்தவித மாதாந்திர உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும்.
- பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.802 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இந்தாண்டு முதல் பிளஸ்1, பிளஸ்2 மாணாக்கர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்
- 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
- அரசு பள்ளிகளில் பொழிவுரு வகுப்புகள் அமைக்கப்படும்.
- கல்வித்துறையுடன் உள்ள விளையாட்டு இளைஞர் நலன் பிரிவு, தனி விளையாட்டுத் துறையாக துவங்கப்படும்.
- புதுச்சேரியில் தேசிய சட்டப்பல்கலைக் கழகம் விரைவில் துவங்கப்பட உள்ளது. அதன் அடிக்கல் நாட்டுக்கு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
- காரைக்காலில் ரூ.80 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டப்படும்.
- எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியாக உயர்த்தப்படுகிறது.
- குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் நடத்தப்படும் குறைதீர்ப்பு கூட்டங்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளதால், குறைதீர்ப்பு கூட்டத்தை அதிகளவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
- உர விற்பனை அதிகரிக்க காரைக்காலில் விற்பனை மையங்கள் அதிகரிக்கப்படும்.
- புதுவை எல்.ஆர்.பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி ஆட்சிப் பரப்பானது நல்லாட்சி, அமைதி, நல்லிணக்கம், பொருளாதார முன்னேற்றம் ஆகிய இலக்குகளை நோக்கி உறுதியுடன் முன்னேறி வருகிறது. பிரதமர் மோடியின் நோக்கப்படி வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலா ஆகிய துறைகளில் பெஸ்ட் புதுவையாக மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
கடுமையான நிதி நெருக்கடி இருந்த போதிலும், எனது அரசு பல நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 2021-22ம் நிதியாண்டில் நமது செலவினம் ரூ.9,793.29 கோடியாகும். இது திருத்திய மதிப்பீட்டின்படி 94.04 சதவீதமாகும். 2022-23ம் நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீடு ரூ.10,696.61 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சொந்த வருவாய் ரூ.6,557.23 கோடியாகும். மத்திய அரசின் நிதியுதவி ரூ.1,729.77 கோடியாகும்.
மேலும் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.1,889.61 கோடியை கடன் மூலம் திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆட்சிப் பரப்பில் 31.3.2022 வரை மொத்த நிலுவைக்கடன் ரூ.9,859.20 கோடியாகும். அரசின் நிதி ஒதுக்கீட்டில் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், கடன், வட்டி செலுத்த செலவிடப்படுகிறது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா என்ற மருத்து காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவ சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு இத்திட்டமானது தகுதி வாய்ந்த வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு நீட்டிக்கப்படும்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்துக்கு கிடைக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உட்பட அனைத்து 1949 சிகிச்சை தொகுப்புகளும் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு இந்த ஆண்டு முதல் வழங்கப்படும்.
நிலுவையில் உள்ள ஓய்வூதிய விண்ணப்பங்கள் அனைத்துக்கும் வரும் மாதங்களில் ஓய்வூதியம் வழங்கப்படும். மாற்று திறனாளிகளுக்கு மாதாந்திர பயணப்படி ரூ.100-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்படும்.
மாற்றுத்திறனாளி, மாற்றுத்திறனாளி அல்லாதவரை திருமணம் செய்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தப்படும்.
மாற்றுத்திறனாளி, மற்றொரு மாற்றுத்திறனாளியை திருமணம் செய்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.
தொடர் நோயால் பாதிக்கப்பட்ட 18 வயது பூர்த்தியடைந்த ஆதிதிராவிட, பழங்குடியினருக்கு மருத்துவ செலவுக்காக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச வயது வரம்பை நீக்கி, அனைத்து வயதினருக்கும் நிதியுதவி வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் 10 ஆண்டு பணி புரிந்தவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்.
புதுச்சேரி காவல்துறையை வலுப்படுத்தும் பொருட்டு இந்த ஆண்டு ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்படும். மேலும் ரூ.5.50 கோடி செலவில் 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், ஒரு ஜாமர் வாகனம் வாங்கப்படும். அனைத்து காவல்நிலையங்களிலும் மகளிர் உதவி மையங்கள் அமைக்கப்படும்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட 390 காவலர்கள் ஓராண்டு அடிப்படை பயிற்சியில் உள்ளனர். மேலும் 48 சப்இன்ஸ்பெக்டர்கள், 307 காவலர்கள், 415 ஊர்க்காவல்படையினர், 200 கடலோர ஊர்க்காவல்படையினர், 35 டிரைவர், 34 சமையல் கலைஞர்கள், 5 பட்லர்கள் என மொத்தம் ஆயிரத்து 44 பணியிடங்கள் நேரடி தேர்வின் மூலம் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற 260 தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும்.
காரைக்கால் துறைமுகம் இலங்கையில் அமைந்துள்ள காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து இந்த ஆண்டு தொடங்கப்படும்.
சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை துறைமுக கழகத்துடன் இணைந்து புதுவை துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் பணிகள் இந்த ஆண்டு முதல் செயல்பட தொடங்கும்.
புதுவை துறைமுக மேம்பாட்டுக்காக பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து மேற்கொள்ள ஆர்வமான நிறுவனங்களிடம் இருந்து விருப்பம் கோரப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்த பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. புதுவை இந்திராகாந்தி பொது மருத்துவமனை, ராஜீவ்காந்தி மகளிர் மருத்துவமனையில் இ-மருத்துவ சேவை தொடங்கப்படும்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் புறநோயாளிகள் பதிவு, சிகிச்சை பிரிவு ரூ.55 கோடியில் கட்டப்படும். மேலும் காரைக்காலில் புதிய அரசு மருத்துவமனை ரூ.80 கோடியில் கட்டப்படும். அதோடு காரைக்காலில் புதிய மருத்துவக்கல்லுாரி கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து சேவையை ஊக்குவிக்க ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 25 எலக்ட்ரிக் பேருந்துகள், 50 எலக்ட்ரிக் ஆட்டோக்கள் புதிதாக இயக்கப்படும். அரசு, தனியார் பஸ்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும்.
பாண்டி மெரினா கடற்கரையில் பாரதியார் சிலையுடன் தமிழ் பூங்கா, பொழுதுபோக்கு பூங்கா, பொழுதுபோக்கு மண்டலம் உருவாக்கப்படும். கைவினை கிராமத்தில் டிஜிட்டல் அருங்காட்சியகம், சுற்றுலா அனுபவ மையம், பொம்மை அருங்காட்சியம், இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் அமைக்கப் படும்.
காரைக்காலில் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்கள், வீராம்பட்டினம் கோவில் ஆகியவை மத்திய அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் மேம் படுத்தப்படும்.
மணப்பட்டு கிராமத்தில் 100 ஏக்கரில் மின்சாரம், சாலை அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தீம் பூங்கா, ஓய்வு விடுதி, மாநாட்டுக்கூடம், திரைப்படக்கூடம், சாகச விளையாட்டு போன்றவை தனியார் பங்களிப்புடன் செய்யப்படும்.
உள்பட ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இன்றைய கூட்டத்தொடரில், சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் மற்றும் அமைச்சர்கள், என்.ஆர். காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி தரப்பில் திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் கலந்து கொண்டுள்ளனர்.