சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு ரூ.1000 உதவி தொகைக்கான வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமயத்தில், குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உதவி தொகை விண்ணப்பம் வெளியாகி உள்ளது. இது போலியா உண்மையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரியுள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதியை அள்ளி வாக்காளர்களை கவர்ந்து வருகின்றனர். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் தான் ஒரு வாக்குறுதி கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவேன். பெண்களுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வெளியாகி உள்ளது. இதை சிலர் பெண்களிடம் கொடுத்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட், பதிவிட்டு, தமிழக அரசு விளக்கம் அளிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது பதிவில், தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை
குடும்பத்தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை; பயனாளிகள் தேர்வுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்படவில்லை; விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்படவில்லை
இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் விண்ணப்பத்தை வினியோகித்து வருகின்றனர். அதன் பின்னணியில் முறைகேடு செய்யும் நோக்கம் இருக்கலாம். இந்த மோசடிக்கு முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தக்கூடாது; விண்ணப்ப வினியோகத்தை தடுக்க வேண்டும்
குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் வினியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மோசடியாக வினியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும்!
என்று வலியுறுத்தி உள்ளார்.
பெண்களுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும்! தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி