சென்னை: தமிழ்நாட்டில் பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி உள்பட சில பகுதி மக்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குவதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இந்த மாதம் தொடக்கத்தில் பெய்த மழையால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 44 செ.மீ மழை பெய்தது. அதனால், அந்த பகுதியே தீவுபோல காட்சி அளித்தது. மேலும், மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. இந்த பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 இழப்பீடு வழங்கப்படும்என அறிவித்தார்.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.1000 வழங்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ரூ .1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.