சென்னை:
தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை உள்பட 4 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
முழு ஊரடங்கின்போது, 104 (கட்டுப்பாட்டறை) மற்றும் 108 (அவசரகால ஊர்தி) ஆகிய சேவைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ள தமிழக அரசு நிவாரண அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மாண்புமிகு அம்மாவின் அரசு,
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலும்,
திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,
செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட
பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கும்.
அதேபோன்று, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக மாண்புமிகு அம்மாவின் அரசு வழங்கும்.
அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின்
ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொது மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்க ப்பட்டுள்ளது.
பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல் வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவ மனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.