தஞ்சாவூர்: தஞ்சையில் திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் பல ஆண்டு காலமாக இருந்து வந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மாநகராட்சியால் மீட்கப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளது.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டில் பதவி ஏற்றதும், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, கோவில்கள் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுதர்சன சபா என்ற கட்டிடம் இருந்து வருகிறது. இதன் மொத்த கொள்ளளவு 40 ஆயிரத்து 793 சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்த இடத்தை அந்த பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ராமநாதன் என்பவர் 100 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் கீழ் வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, அந்த சபா வளாகத்தில் மதுக்கூடம், ஹோட்டல், செல்போன் கடைகள் வைப்பதற்கு திமுக பிரமுகர் உள்வாடகை விட்டு சம்பாதித்து வந்துள்ளார்.
ஆனால் பல ஆண்டு காலமாக அந்த இடத்திற்கான வரியையும், மாநகராட்சிக்கான வாடகையும் செலுத்தவில்லை. இது பல லட்சங்களை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அதை கண்டுகொள்ளாத நிலையில், தற்போது மாநகராட்சி சார்பில், அந்த பகுதியில் தண்டோரா வாயிலாக அறிக்கப்பட்டு, அந்த கட்டிடத்தில் நோட்டீசும் ஒட்டப்பட்டது.
ஆனால், திமுக நபர் ராமநாதன் அதை கண்டுகொள்ளாத நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை அதிரடியாக கைப்பற்றினர். சுதர்சன சபா கட்டிடம் மற்றும் அதை சுற்றியுள்ள நிலத்தின் மதிப்பு 100 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.