சென்னை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தும், கல்வி நிலையங்களுடன் இணைந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் களுக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் மாதாந்திர கட்டணத்தை ரூ.400 ஆக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது உரையாற்றிய, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்டப்படும் என தெரிவித்தார். அதன்படி அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுஉள்ளது.

இதுதொடர்பாக  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் (ஆதிதிராவிடர் நலம்) 08.09.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு செலவு கூட்டத்தொடரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள்.

“ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 1138 பள்ளிகளில் பயிலும் 83,259 மாணாக்கரின் கல்வி நலனை உறுதி செய்யும் பொருட்டும், மாணாக்கரின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் வகையிலும், 150 பள்ளிகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள் கட்டப்படும்.”

மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ரூபாய் நூறு கோடி மதிப்பீட்டில் 29 மாவட்டங்களில் உள்ள 150 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு 480 புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் 15 ஆய்வகக் கட்டடங்களை கட்டித் தருவதற்கு நிருவாக அனுமதி வழங்கி அரசாணை (நிலை) எண்:104, ஆதி.(ம)ப.ந. (ஆதிந2(1)) துறை. நாள் : 07.12.2021 – ல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, கல்வி நிலையங்களுடன் இணைந்து விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணத்தை ரூ.400 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2021-2022 ஆம் ஆண்டிற்கான கல்வி மானியக் கோரிக்கை உதவித் தொகை திட்டங்களின் கீழ் கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ கல்வி மாணவியருக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணம் ரூ.400 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களால் “விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு உண்டி மற்றும் உறையுள் கட்டணத்தை எவ்வித பாகுபாடின்றி வழங்கும் பொருட்டு. கல்வி உதவித் தொகை திட்டங்களின் கீழ் கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு மாதாந்திர உண்டி மற்றும் உறையுள் கட்டணமாக தற்போது பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு 175 ரூபாய் தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு 350 ரூபாய், ஐடிஐ / பட்டயப்படிப்பு மற்றும் முதுகலை மாணவ, மாணவியருக்கு 225 ரூபாய் என்று வழங்கப்படுவதை அனைவருக்கும் 400 ரூபாயாக உயர்த்தி மொத்தம் 9 கோடி ரூபாய் கூடுதல் செலவில் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி,கல்வி நிலையங்களுடன் இணைந்துள்ள விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ கல்வி மாணவியருக்கு வழங்கப்படும் உண்டி மற்றும் உறையுள் கட்டணம் ரூ.400 ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.