ராஜ்ய சபா உறுப்பினர் மற்றும் ஆளுநர் பதவி வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலை மேற்கோள்காட்டி என்.டி.டி.வி. வெளியிட்டிருக்கும் செய்தியில், அரசு துறையின் முக்கிய பொறுப்புகள் மற்றும் அமைச்சக பணிகள் உள்ளிட்ட பல்வேறு உயர்பதவிகள் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பலை சிபிஐ கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ராஜ்ய சபா மற்றும் ஆளுநர் பதவிகளுக்கு 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதற்கான ஆதாரங்களும் தொலைபேசி உரையாடல்களும் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக பணப்பரிமாற்றம் நடைபெற்ற போது மகாராஷ்டிரா, கர்நாடக மற்றும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த கர்மலாகர் பிரேம்குமார் பண்ட்கர், கர்நாடகாவைச் சேர்ந்த ரவீந்திர வித்தல் நாயக் மற்றும் டெல்லியைச் சேர்ந்த மகேந்திர பால் அரோரா மற்றும் அபிஷேக் பூரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட கர்மலாகர் பிரேம்குமார் பண்ட்கர் தனக்கு அரசு துறையில் பல்வேறு உயரதிகாரிகளை தெரியும் என்று கூறிவந்ததாகவும் அரசு தொடர்பான எந்த விவகாரம் நடக்கவேண்டும் என்றாலும் தன்னை அணுகினால் நடத்தி தருவதாகவும் கூறியுள்ளான்.
இதனைத் தொடர்ந்து ஆள் பிடித்துத்தரும் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார் அபிஷேக் பூரா, இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு துப்பு கிடைத்ததைத் தொடர்ந்து இந்த மோசடி கும்பலை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது.