சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,  திமுக அரசு மேற்கொண்ட, ரூ.4000 கோடி வடிவால் பணிக்கு வெள்ளை அறிக்கை வேண்டும் என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. மழை ஓய்ந்து இரண்டு நாட்கள் கடந்தும், இன்னும் மழைநீர் முழுமையாக வடியாக நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மட்டுமின்றி அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் நிவாரண உதவிகள் செய்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னை தரமணியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  ஆய்வு செய்து,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அன்புமணி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  தமிழ்நாடு அரசு கேட்கும் நிவாரண உதவிகளை  மத்திய  அரசு உடனே வழங்க வேண்டும் என்று  வேண்டுகோள் விடுத்தார். மேலும்,  சென்னையில் மழை வெள்ளம் ஏற்படாதவாறு திமுக அரசு ரூ.4000 கோடி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டதாக கூறியது.  அதுகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியவர்,   சென்னையில் நோய் தொற்றை தடுக்க ஒவ்வொரு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்றும் புயல் பாதித்த மாவட்டங்களில் ஒரு மாதம் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரூ. 4,000 கோடி என்னாச்சு? வெள்ளை அறிக்கை கேட்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…