வேலூர்:  வேலூர் மாவட்டத்தில் 6 ஆம்புலன்ஸ் வாகனம் உள்பட  ரூ. 10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் 738 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 94 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களும், கே.வி.குப்பம் வட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் 388 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 48 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் என மொத்தம் ரூ. 10 கோடியே 42 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களை கலெக்டர் அ.சண்முகசுந்தரம் தலைமையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,  அம்மாவின் வழியில் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து வழங்கினார். அதனை தொடர்ந்து குடியாத்தம், வாணியம்பாடி, அரக்கோணம் என மூன்று வருவாய் கோட்டங்களை பிரித்தும், கே.வி.குப்பம் உள்ளிட்ட 6 வருவாய் வட்டங்களை பிரித்து அந்த அலுவலகங்கள் செயல்படுவதற்கு இன்றைக்கு ரூ. 8 கோடியே 65 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் குடியிருப்பு , குடியாத்தம், கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்கு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

மக்கள் நலனுக்காக ஆட்சி செய்யும் தமிழக அரசு மக்களை தேடி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக பொதுப்பணித்துறை சார்பில் வேலூர் மாவட்டத்திலுள்ள 101 ஏரிகளில் 56 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்டு வடகிழக்கு பருவ மழை, நிவர் புயலின் போது பெய்த மழையால் பெரும்பாலான ஏரிகள் நிறைந்துள்ளது.

இன்று மட்டும் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தாட்கோ, மகளிர் திட்டம், ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் குடியாத்தம் வட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் 738 பயனாளிகளுக்கு ரூ. 4 கோடியே 94 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களும், கே.வி.குப்பம் வட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் 388 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 48 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் என மொத்தம் ரூ. 10 கோடியே 42 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது.

வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு 6 அவசர உதவி 108 ஆம்புலன்ஸ் வாகனம் இன்று வழங்கப்பட்டுள்ளது. குடியாத்தம் ஜீவா நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.