சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ரூ.10 கோடி மோசடி செய்துள்ளதாக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்து உள்ளார். இந்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படம் நடிப்பதாக கூறி பணத்தை வாங்கி 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை படத்திலும் நடிக்க வில்லை, வாங்கிய தொகையையும் திருப்பிக் கொடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரித்த உத்தம வில்லன் திரைப்படம் கடந்த 2015-ல் வெளியானது. விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகள் வாங்கி குவித்த உத்தம வில்லன் திரைப்படம் வியாபார ரீதியாக பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
இந்த நிலையில், உத்தம வில்லன் படத்தை வெளியிடும் சமயத்தில் நிதி நெறுக்கடி ஏற்பட்டதால் கமல்ஹாசன் தம்மை அணுகியதாகக் கூறும் ஞானவேல் ராஜா, தமது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாக கூறி முன்பணமாக ரூ.10 கோடி பெற்றதாக கூறியுள்ளார்.
பணத்தை வாங்கி 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை தமது படத்திலும் நடிக்கவில்லை, வாங்கிய தொகையையும் திருப்பிக் கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார் மனுவில் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் ’பிக் பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில், ’இந்தியன்-2’, ’தலைவன் இருக்கின்றான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத் தக்கது.