சென்னை:
மிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு முதல்வரின் தமிழகத்தின் முக்கிய கோவில்களில் உள்ள உபரி நிதியை வழங்க தமிழகஅரசு உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து தினமலர் வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒன்றரை மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை கோரப்பட்டு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக  முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க தமிழகத்தின் முக்கிய கோவில்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை முதன்மை செயலர் பணீந்திர ரெட்டி கடந்த மாதம் 24ந்தேதி அனைத்து முதுநிலை கோவில் அதிகாரிகளுக்கும்  சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.
அதில்,  ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி தவிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் முதல்வரின் கொரோனா நிவாரண நிதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. அதனால் தக்கார், அறங்காவலரின் தீர்மானத்தின்படி ஏப்ரல்.24 அறநிலைய துறைக்கு உரிய நிதியை கோவில்களின் உபரி நிதியில் இருந்து எடுத்து முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
அதன்படி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 47 கோவில்களில் இருந்து உபரி நிதியை எடுத்து மொத்தமாக ரூ.10 கோடி நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி,   பழனி, திருச்செந்தூர், மதுரை, திருத்தணி, திருவேற்காடு, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், சமயபுரம், ராமேஸ்வரம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் ஆகியவை தலா ரூ.35 லட்சம் நிதி வழங்க வேண்டும்,
பண்ணாரி அம்மன் கோவில், அழகர் கோவில், மருதமலை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, வடபழனி ஆண்டவர், மாங்காடு, திருப்பரங்குன்றம், சங்கரன்கோவில், சுவாமி மலை, மதுரை பாண்டி முனீஸ்வரர் கோவில் ஆகியவை தலா ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும்,
காஞ்சிபுரம் தேவராஜர், திருவொற்றியூர் தியாகராஜர், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர், மேல்மலையனூர் அங்காளம்மன் ஆகியவை தலா ரூ.15 லட்சம் நிதி  வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் மாநில பொதுச் செயலாளரும், தினமலர் வெளியீட்டாளருமான ஆர்.ஆர்.கோபால்ஜி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.