சென்னை

போரூர் அருகே மெட்ரோ ரயில் பணியின் போது கர்டர் விழுந்து விபத்து ஏற்பட்டதை அடுத்து ஒப்பந்த தாரருக்கு ரூ/ 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 44.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடந்து வருகிறது. இதில், போரூர் முதல் சென்னை வர்த்தக மையம் வரை உயர்மட்ட பாலப்பணிகள் நடக்கிறது.

இந்த உயர்மட்டப்பாதையின் கீழ், 30 அடி உயரத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், போரூர்-நந்தம்பாக்கம் வரை இணைப்பு பாலம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக 2 தூண்கள் இடையே, ராட்சத கான்கிரீட் ‘கர்டர்’ அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 12-ந் தேதி இரவு நந்தம்பாக்கத்தில், ராட்சத ‘கர்டர்’ திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் 2 தலைமை பொதுமேலாளர்கள் அடங்கிய குழு விசாரணை நடத்தியது.

இந்த விசாரணை அடிப்படையில், குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சம்பவத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட 4 என்ஜினீயர்கள் மெட்ரோ திட்டப்பணியில் இருந்து நீக்கப்பட்டனர். மெட்ரோ ரெயில் திட்ட இயக்குநர் குழுவின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.