சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் பல ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.

சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரியும் அட்வான்ஸ் டேக்ஸாக மாறிய நிலையிலும் சாலைகள் செப்பனிடப்படாமல் உள்ளது வேதனையளிப்பதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் போடப்படாத சாலைக்கு ரூ. 1.98 கோடி பணம் வழங்கப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமமுக தலைவர் டி.டி.வி. தினகரன் :

உப்புத்தின்றவர்கள் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும் என்று எதுகை மோனையில் வீடியோ வெளியிடும் முதல்வர், தனது ஆட்சியின் கீழ் பணி செய்யும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் இந்த முறைகேட்டை மூடி மறைத்து ஊழலுக்குத் துணை போயுள்ளனர் என்பதை அறிவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தி ஊழலுக்கு துணை போன அதிகாரிகள் மீது முதலமைச்சர் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்..

மேலும், “கடந்த ஆட்சியில் ஊழல் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கடந்த கால ஆட்சியாளர்களுடன் சமரசம் செய்து கொண்டு மற்றொரு முறைகேடு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறதா? என்ற மக்களின் கேள்விக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.