சென்னை:  திருச்சி அரசு கிளை அச்சகத்தில் ரூ.1.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிட்ங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி, சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள அரசு கிளை அச்சகத்தில் ரூ. 1.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை  முதலமைச்சர் இன்று  திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.08.2024) தலைமைச் செயலகத்தில், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி, சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள அரசு கிளை அச்சகத்தில் 1 கோடியே 82 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார்.

 

எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையானது மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுத் துறைகளின் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் நிலைப்படுத்தப்பட்ட படிவங்கள், பதிவேடுகள், துறை சார்ந்த நடைமுறை நூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், தேர்தல் படிவங்கள் ஆகியவற்றை அச்சிட்டு வழங்கி வருவதுடன், அரசு அச்சகங்களுக்கு தேவையான புதிய நவீன இயந்திரங்களை கொள்முதல் செய்தல், உதிரிபாகங்கள் மற்றும் காகிதங்களை கொள்முதல் செய்தல், அரசு அச்சகங்களுக்கு தேவையான பணியாளர்களை நியமனம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திருச்சிராப்பள்ளி அரசு கிளை அச்சகம் 1965-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த கட்டடமாகும். தற்போதுள்ள அக்கட்டடத்தின் அளவு 13,200 சதுர அடி மற்றும் காகித ரீல் குடோன் அளவு 132 சதுர அடி ஆகும். இந்த அச்சகத்தில் பொதுத்துறை தொடர்பான 28 பதிவேடுகளும், காவல்துறை தொடர்பான 17 பதிவேடுகளும் மற்றும் கல்வித்துறை தொடர்பான 1 பதிவேடு,

என மொத்தம் 46 பதிவேடுகளும் மற்றும் பொதுத் துறைக்கான 27 படிவங்கள் மற்றும் காவல்துறைக்கான 2 படிவங்கள், என மொத்தம் 29 படிவங்கள் அச்சிடப்பட்டு வருகிறது. மேலும், திருச்சிராப்பள்ளி, கரூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கான மாவட்ட அரசிதழ்கள் அச்சிடப்பட்டு அனுப்பும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றுடன் அவ்வப்போது ஒதுக்கீடு செய்யப்படும் அரசு தேர்வு விடைத்தாள்கள், தேர்தல் படிவங்கள் மற்றும் பல்கலைக்கழக விடைத்தாள்கள் போன்ற அவசர பணிகளும் அச்சிடப்பட்டு அனுப்புகை செய்யப்பட்டு வருகிறது.

இந்த அச்சகம் தமிழ்நாட்டின் மத்திய மாவட்டத்தில் செயல்படுவதால் பிற மாவட்டங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களுக்கு தேவையான படிவங்கள் / பதிவேடுகள் அச்சிட்டு உடனடியாக வழங்க இயலுமென்பதாலும், கிளை அச்சகத்தின் காகித குடோனில் உள்ள காகித இனங்களை வகைப்படுத்தி வைக்க போதுமான இடவசதி இல்லையென்பதாலும், கூடுதல் பணிகள் மேற்கொண்டு உற்பத்தி திறனை அதிகரிக்கவும், இந்த அச்சகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், துவாக்குடி, சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள அரசு கிளை அச்சகத்தில் 9456.97 சதுர அடி பரப்பில் 1 கோடியே 82 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இக்கூடுதல் கட்டடத்தில், பல்கலைக்கழகங்கள், அரசு தேர்வுகளுக்கு தேவையான விடைத்தாட்கள் மற்றும் பொது படிவங்களின் அச்சுப்பணிகளை அதிகரிக்கவும், அச்சுப்பணிகளுக்கு தேவையான காகித ரீல்கள் மற்றும் காகிதங்களை பாதுகாக்கவும், அச்சிடப்பட்ட படிவங்கள், பதிவேடுகளை உரிய முறையில் பராமரித்து இருப்பு வைப்பதற்கும், பொதுமக்கள் மற்றும் பணியாளர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திடவும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்தளம் வசதி போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் திருமதி வெ. ஷோபனா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன் இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.