ர்னூல்

ராயலசீமா பகுதியை மத்திய, மாநில அரசுகள் கவனிக்காததால் வறட்சி நிலவுவதால், விவசாயிகள் மோடிக்கு 68 பைசா பிறந்த நாள் பரிசாக அளித்து தங்கள் எதிர்ப்பை காட்டுகிறார்கள்.

ராயலசீமா பகுதி கர்னூல்,கடப்பா, அனந்தப்பூர், சித்தூர் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.  இந்தப் பகுதியில் இரு பெரும் நதிகளாகிய பென்னா, மற்றும் கிருஷ்ணா பாய்ந்து வருகிறது.  ஆனால் அரசு நீர்ப்பாசனத்துக்காக எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாததால் இந்த பகுதி பாலைவனம் போல் மாறி வருகிறது.

இது குறித்து ராயலசீமா சகுநீதி சாதனா சமிதி என்னும் அமைப்பின் தலைவர்கள் சுதாகர் ராவ் மற்றும் ஒய் என் ரெட்டி ஆகியோர், “எங்கள் பகுதியில் விவசாயமும் நடைபெற வாய்ப்பில்லை.  எந்த ஒரு தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை. கடப்பாவில் இரும்பு ஆலை வரும் எனவும், குண்டக்கல்லில் ரெயில்வே ஜோனல் அலுவலகம் தொடர்ப்படும் எனவும் மத்திய தொழிற்கூடங்கள் அமையும் எனவும்  மாநில அரசும் மத்திய அரசும் மாறி மாறி அறிக்கை விடுகின்றன.  ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை.

பல நீர்ப்பாசன திட்டங்களும் இது வரை அறிவிப்பு நிலையிலேயே இருந்து வருகிறது.  அதனால் விவசாயம் என்பதும் இல்லாமல் தொழில் வசதிகளும் இல்லாமல் பின் தங்கிய நிலையில் ராயல சீமா உள்ளது.   இந்த நிலையில் பெரியவர் மோடிக்கு 68 ஆவது பிறந்த நாள் வருகிறது.   எங்களால் முடிந்த பரிசை அவருக்கு தர விரும்புகிறோம்.   குசேலர் தனது பணக்கார நண்பன் கிருஷ்ணனுக்கு அவரால் முடிந்த அவலை பரிசளித்தது போல் விவசாயிகள் மோடிக்கு 68 பைசா பரிசளிக்க உள்ளனர்.  இதற்காக இது வரை 200 காசோலைகள் 68 பைசாவுக்கு பெறப்பட்டுள்ளன.   மேலும் காசோலைகள் திரட்டி வருகிறோம்.

நாங்கள் மோடிக்கு இந்த பரிசை அளிப்பதன் மூலம் அவர் ராயலசீமா விவசாயிகளின் நிலையை புரிந்துக் கொண்டு இந்த ராயல சீமா குசேலர்களுக்கு அள்ளித் தராவிட்டாலும் கொஞ்சம் கிள்ளியாவது தருவார் என நம்புகிறோம்.   எங்களின் எதிர்ப்பைக் காட்டவே நாங்கள் இதை செய்கிறோம்.  மற்றபடி பிரதமரை நாங்கள் மிகவும் மதித்து மரியாதை செய்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.