சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரான சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில், சென்னையில் துப்பாக்கிகளுடன் ரவுடிகும்பல் ஒன்று கைது செய்யப்பட்ட நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய காவல்ஆணையர் ரத்தோர், சென்னையில் ரவுடியிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், மேலும் ஏதேனும் ரவுடியிசம் குறித்து தகவல்கள் வந்தால் அவர்கள்மீது 100 விழுக்காடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் , சென்னை காவல்துறையில் உள்ள வடக்கு மண்டல அதிதீவிர குற்றப்பிரிவுக்கு கடந்த 13ம் தேதி ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டினப்பாக்கத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலையில் சம்பந்தப்பட்ட ராணிப்பேட்டையை சேர்ந்த ஜெயபால் (63), திருநெல்வேலி நாங்குநேரி பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (எ) சுரேஷ் (24), ராமயன்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (எ) மதன் (30) உள்ளிட்ட 17 பேர் திருமங்கலம் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 68 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களுடன் நடத்திய விசாரணை மற்றும் அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, முக்கிய குற்றவாளியான இசிஆர் பிரசன்னா, வசந்த் டேவிட், செல்வபாரதி ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், தப்பிராஜ் என்பவர் ஒரு முக்கிய குற்றவாளி என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 5 ஆண்டுகள் பீகாரில் இருந்துள்ளார். தப்பிராஜ் மூலம்தான் இதுபோன்ற துப்பாக்கிகளை பீகாரில் இருந்து வாங்கி இங்குள்ள ரவுடிகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும், தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஒருவர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு ரவுடியிசத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் மாநகர காவல்துறையில் வடக்கு மற்றும் தெற்கு அதிதீவிர குற்றப்பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு பிரிவு என 3 பிரிவு அதிகாரிகள் திறமையாக செயல்பட்டு பெரிய குற்றம் நடப்பதற்கு முன்பாக குற்றவாளிகளை அனைவரையும் கைது செய்துள்ளனர்.
சென்னை மாநகரை பொறுத்தவரை யாராவது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் குறித்து தகவலின்படி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வழக்கில் வடக்கு மாண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ராகார்க், தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் மேற்கு இணை கமிஷனர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயுதங்களுடன் 20 பேர் சுற்றுகிறார்கள் என்றால் பெரிய சம்பவம் செய்யதான் சுற்றியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக கைது செய்துள்ளனர். விசாரணை நடந்து வருவதால் எதற்காக சுற்றினார்கள் என்ற விவரங்களை தற்போது சொல்ல முடியாது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைபடி ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
‘பருந்து’ செயலி மூலம் ரவுடிகளை கண்காணித்து வருகிறோம். ரவுடிகளை கண்காணிப்பதற்காகவே 3 பிரிவுகள் இயங்கி வருகிறது. அதில் 2 பிரிவு கூடுதல் கமிஷனர்களிடம் தகவல் அளித்து வருகின்றனர். ஒரு பிரிவு கமிஷனரிடம் நேரடியாக தகவல் அளித்து வருகின்றனர்.
பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சிபிஐ மூலம் இன்டர்போல் மற்றும் இந்திய அரசு மூலம் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக இந்திய அரசு சார்பில் ஒரு நோடல் அதிகாரி ஒருவரை நியமித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் முதலில் சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து என்று சொன்னார்கள். எனவே 3 அல்லது 4 இடங்களில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. இதுபோன்ற மெயில் வந்தால் அதை பிளாக் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சென்னை மாநகர காவல் எல்லையில் ஜீரோ விழுக்காடு ரவுடியிசம், ஜீரோ விழுக்காடு ஆயுதங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது. அப்படி ஏதேனும் தகவல்கள் வந்தால் அவர்கள் மீது 100 விழுக்காடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.