செங்கல்பட்டு:
ரவுடியை கொலை செய்ததாக பாதிரியார் உட்பட, ஐந்து பேரை, காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு அடுத்த, வேண்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் ஆசீர் என்ற ஆசீர்வாதம். வயது 35. இவர் அந்த பகுதியில் அடிதடியில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது.
இவர் நேற்று காலை, 10:15 மணிக்கு, அதே பகுதியில் உள்ள, கே.கே., நகர் சீயோன் சகோதர சபைக்கு சென்று, பாதிரியார் இமானுவேல் பிரகாஷ் என்பவரிடம் பணம் கேட்டு, மிரட்டினார்.
இதனால், ஆத்திரமடைந்த பாதிரியார் மற்றும் அவர் மகன், தம்பி ஆகியோர், ஆசீரை மரத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கினர். தலையில் பலமாக அடிபட்டதால் ஆசீர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
தகவலறிந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாதிரியார் இமானுவேல் பிரகாஷ், 50, அவர் மகன் மனோபால் பிரகாஷ், 21, அவர் தம்பி ஜோயல்பிரகாஷ், 44, கருணாகரன், 32, லோகிதாஸ், 29, ஆகியோரை, காவல்துறையினர் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
கொலை வழக்கில் பாதிரியார் கைது செய்யப்பட்டது அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.