த்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பிக்ரு என்ற கிராமத்தை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபேயை பிடிக்க சென்ற 8 போலீசார், அவனது கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தப்பி ஓடிய ரவுடியை பிடிக்கும் பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு நடந்தபோது விகாஸ் துபேயின் வலது கரம் என்று வர்ணிக்கப்படும் தயா சங்கர் அக்னிகோத்ரி என்பவனும் உடன் இருந்துள்ளான்.

தப்பிச்சென்ற அவனை கான்பூர் அருகே கல்யான்பூர் என்ற இடத்தில் போலீசார் நேற்று அதிகாலை என்கவுண்டர் நடத்தி உயிரோடு பிடித்தனர்.
போலீசில் தயா சங்கர் அளித்த வாக்குமூலம் மற்றும் இந்த கொடூர கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிற வைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன் விவரம்:
ரவுடி துபேக்கு, தன்னை பிடிக்க பெரும் போலீஸ் படை வந்து கொண்டிருக்கும் தகவல் முன் கூட்டியே தெரிந்துள்ளது. அந்த தகவலை அவனுக்கு சொன்னது வேறு யாரும் அல்ல.. அவனை பிடிக்க சென்ற சாபேபூர் காவல் நிலையத்தில் இருந்து தான் ’கறுப்பு ஆடு’’ ஒன்று இந்த ரகசியத்தை போட்டுக்கொடுத்துள்ளது.
உஷாரான துபே , போன் செய்து தனது கும்பலை சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட ரவுடிகளை பிக்ரு கிராமத்துக்கு உடனடியாக வரச்செய்தான். அவர்கள் அனைவரும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கையாள்வதில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
துபேயின் ஏற்பாட்டின் பேரில், போலீஸ் வருவதற்கு சற்று நேரம் முன்பாக பிக்ரு கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் வாரிய ஊழியர்கள் , சிலர் இந்த சதிச்செயலுக்கு உடந்தை யாக இருந்துள்ளனர். தனது கூட்டாளிகள் வந்து சேர்ந்ததும் போலீசார் மீது எப்படி தாக்குதல் நடத்துவது என்பதை துபே விளக்கமாக விவரித்துள்ளான்.
‘’ இங்கு வரும் போலீசார், சவப்பெட்டியில் தான் தங்கள் வீட்டுக்கு போக வேண்டும்’’ என்பது அவன் பிறப்பித்த ஆணைகளில் ஒன்று. அவன் கட்டளைப்படியே , அடியாட்கள் செயல்பட்டு, ’’பொறியில்’ சிக்கிய போலீசாரை இரக்கமின்றி சுட்டுத்தள்ளினர்.
ரவுடி துபேயின் இல்லம் , சினிமாவில் வரும் கொள்ளையனின், மர்ம மாளிகை போல் இருந் துள்ளது. அந்த வீட்டில் பதுங்கு குழி ஒன்றை உருவாக்கி இருந்தான், துபே.
அந்த பதுங்கு குழியில் இருந்து அவனது பழைய வீட்டுக்கு தப்பி செல்ல சுரங்க பாதை ஒன்றும் அமைத்திருந்தான்.

வெளியே என்ன நடக்கிறது நடக்கிறது என்பதை கண்காணிக்க , தனது வீட்டிக்குள் ;கண்ட்ரோல் ரூம்’ ஒன்றை அவர் நிர்மாணித்திருந்தான்.
அவனது சொகுசு மாளிகையை சனிக்கிழமை புல்டோசர் மூலம் போலீசார் இடித்து தரை மட்டமாக்கி விட்டனர்.
அங்கிருந்து 15 நாட்டு வெடிகுண்டுகள், 6 கை துப்பாகிகள், மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
பல மாதங்களுக்கு தேவைப்படும் மளிகை சாமான்களையும், ரவுடி துபே அந்த பதுங்கு குழியில் மறைத்து வைத்திருந்தான்.
‘’ விகாஸ் துபேயின் செயல்பாடுகள் தீவிரவாத இயக்கத்தினர் செயல்படுவது போல் இருந்துள்ளது. எனவே அவனை இனிமேல் தீவிரவாதி போன்றே போலீசார் கையாள்வார்கள்’’ என்று கான்பூர் ஐ.ஜி. மோகித் அகர்வால் தெரிவித்துள்ளார்.
-பா.பாரதி.