திருச்செந்தூர்
அகில இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழக கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கையை நாளை வரை நீட்டித்துள்ளது.
நேற்று காற்றின்போக்கு காரணமாக தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் அதீத அலை, கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
எனவே தமிழகத்தை பொறுத்தவரை, கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும் அறிவுறுத்தி இருந்தது. அதைப்போல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
குறிப்பாக திருச்செந்தூரில் கடல் சீற்றம் காரணமாக பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் அதீத அலை, கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை நாளை வரை நீட்டிக்கப்படுவதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
தற்போது சென்னை, கடலூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, குமரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்தூர், உவரி, கூடங்குளம் பகுதிகளில் கடல் அதீத சீற்றத்துடன் காணப்படும் என்பதால், இந்த பகுதிகளில் கடற்கரைக்கு வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.