சென்னை: பக்தர்களின் வசதிக்காக திருநீர்மலையில் ரூ.8 கோடி செலவில் ரோப்கார் வசதி செய்யப்படும் என தமிழக சட்டப்பேரவையில், அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தின் 3வது மற்றும் கடைநாள் கூட்டத்தொடரான இன்று காலை கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர்கள் பதில் தெரிவித்தனர். அப்போது பல்லாவரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ இ.கருணாநிதி திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோவிலுக்கு ரோப்கார் வசதி செய்ய அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் சேகர்பாபு, திருநீர்மலையில் 108 படிக்கட்டுகள் உள்ளன. இங்கு சாமி தரிசனம் செய்வதற்கு வயது முதிர்ந்தவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு அந்த கோவிலில் ரோப்கார் வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான சாத்திய கூறுகளும் ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ரூ.8 கோடியே 17 லட்சம் செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டு உள்ளது.
தமிழக முதல்மைச்சர் இதுபோன்று 5 கோவில்களில் ரோப்கார் வசதி செய்யப்படும் என்று அறிவுறுத்தினார். ஆனால் தற்போது 7 கோவில்களில் ரோப்கார் வசதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் சொன்னதை செய்யும் அரசாகவும், சொல்லாததை செய்யும் அரசாகவும் இந்த அரசு உள்ளது. பழனியில் புதிதாக ரோப்கார் வசதி ஏற்படுத்து வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
இதற்கு பிறகு பேசிய கருணாநிதி எம்.எல்.ஏ. திருநீர்மலை கோவிலில் அர்ச்சகர்கள் வசதிக்காக ரூ.௧ கோடியே 96 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரோப்கார் வசதி செய்து தருவதாக கூறிய முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.