ரோமானிய நாட்டு தலைநகர் புசாரெஸ்ட்-ல் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

அந்நாட்டு அரசு, ஊழல்வாதிகளுக்கு சாதகமான சட்டத் திருத்தம் கொண்டுவர முயன்றதை முறியடிக்க, ஊழலுக்கெதிரான சமூக செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களைத் தொடர்ந்து பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு புரட்சியைப் போன்றே, ரோமானிய மக்களும் தொடர்ந்து சளைக்காமல் போராடி ரோமானிய அரசினை அவர்கள் கோரிக்கைக்குச் செவிசாய்க்க வைத்து விட்டனர்.

ரோமானிய அரசு, அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி கூறினாலும், மக்கள் கலைந்து போகவில்லை.

அர்சின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறுகின்றனர்.
தலைநகரில் மட்டும் 3 லட்சம் மக்களும், நாடெங்கிலும் 10 லட்சம் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகள் முழுவதும் ஊழல் தலைவிரித்தாடுகின்றது. நாட்டிற்கு நாடு சிறிதளவே மாறுபடுகின்றது.

கடந்த செவ்வாய்க் கிழமை ரோமானிய அரசு கொண்டுவந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து மக்கள் வீதிக்கு வரத் துவங்கினர். தினமும் போராட்டத்திற்கு மக்கள் வெள்ளம் பெருகத் துவங்கியது. ஞாயிற்றுக் கிழமை “சட்டத் திருத்தத்தினை வாபஸ் பெறுவதாகப் பிரதமர் அறிவித்தார்.

எனினும், இன்னும் மக்கள் தொடர்ந்து போராட்டக் களத்தை விட்டு வெளியேறவில்லை.

“இப்போது சட்டமுன் வரைவை வாபஸ் வாங்கினாலும், இன்னும் ஒரு மாதம் கழித்து மீண்டும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தாலும் வரக்கூடும் என மக்கள் அரசுமீது நம்பிக்கையின்றி உள்ளனர். இது ஊழலுக்கெதிரான போராட்டம் மட்டுமில்லை. ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டம்” என்கின்றனர் போராட்டக்காரர்கள்.

தமிழகத்தில், மாநில அரசு அவசரச் சட்டமியற்றினாலும், நிரந்தரச் சட்டம் இயற்றும் வரை மக்கள் போராடியது இங்கு ஒப்பிடத்தக்கது.

இதன் பின்னனி விவரம்:
கடந்த நவம்பர் 2015ல்,பிரதமர் விக்டர் போன்டா மீது ஊழல் புகாரின் பேரில், வழக்கு நடைபெற்றது. ரோமானிய வரலாற்றில் பதவியில் உள்ள பிரதமர்மீது ஊழல் வழக்கு நடைபெற்றது. இதனால்,
பெரும்திரளான மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடினர். தற்போதைய ஆளும்கட்சியான சோசியல் டெமோகிராட்ஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் விக்டர் போன்டா தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது.

அந்தப் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில், புஜாரெஸ்டில் உள்ள ஒரு இரவுவிடுதி தீயிட்டு கொளுத்தப்பட்டு, 64 பொதுமக்கள் இறந்தனர்.
நம் நாட்டு ஜனாதிபதி ஆட்சி போன்று, இடையில் நிர்வாக ஆட்சி நடைபெற்று வந்தது.
மீண்டும், சோசியல் டெமோகிராட்ஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
விக்டர் போன்டாவிடமிருந்து பிரதமர் பதவியைப் பெற்ற லிவியு டிராக்னியா, பிரதமராகவே தகுதியற்றவர். ஏனென்றால், தேர்தல் முறைகேடு வழக்கில் அவரைக் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

லிவியு டிராக்னியா மீது சிறைக்கு செல்லக்கூடிய அதிகார துஷ்பிரயோக வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சோசியல் டெமோகிராட்ஸ் கட்சி கடந்த மாதம் சில சட்ட மாறுதல்களை முன்மொழிந்தது. அந்தச் சட்ட மாறுதல்கள், ஊழல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும், லிவியு டிராக்னியாவை சிறைத்தண்டனையிலிருந்து காப்பாற்றி, தொடர்ந்து பிரதமராக இருக்க வழிசெய்யும் விதத்தில் இருந்தது.
இந்த அரசு இயற்றவிருந்த மற்றொரு சட்டத்தின் மூலம், ஐந்து வருடங்களுக்குக் குறைவாக சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்ய வழிசெய்யும். லிவியு டிராக்னியாவின் தேர்தல் தில்லுமுல்லு தண்டனை இரண்டாண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அரசு கொண்டுவந்த மற்றொரு அவசரச் சட்டம்மூலம், இந்திய மதிப்பில் ரூபாய் 32 லட்சம் மதிப்பு மற்றும் அதற்கும் குறைவாக லஞ்சம் பெற்றால் “கிரிமினல் குற்றமில்லை” என அறிவிக்க இருந்தது. இந்த சட்டதிருத்தம், தற்போதைய பிரதமரை தண்டனையிலிருந்து காப்பாற்றும் விதமாகவே உள்ளது, ஏனெனில், பிரதமர் மீதுள்ள ஒரு வழக்கின் லஞ்சத்தொகை 35 லட்சச்திற்கும் குறைவாகும்.
இதனால் வெகுண்டெழுந்த மக்கள், வீதிக்கு வந்து நாடெங்கிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்காக அலங்காநல்லூர், மெரினா மற்றும் தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டத்தைப் போலவே, மக்கள் பெரும்திரளாக கலந்துக் கொண்டனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் இயற்றியும் கலைந்து செல்ல மறுத்தது போல், ரோமானியர்கள், இன்னும் போராட்டக்களத்தை விட்டு அகல மறுக்கின்றனர். அவர்களுக்கு, ஆளும்கட்சி, மீண்டும் ஒருமுறை இது போன்ற மக்களின் எதிபார்ப்பிற்கு எதிராகச் சட்டமியற்ற முற்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

மக்களின் பேராதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ள ஆளும்கட்சிக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில், ஆம் ஆத்மி கட்சியைப் போல், கடந்த ஆண்டு ரோமானியாவில் “ஊழலற்ற மற்றும் வெளிப்படையான நிர்வாகம்” எனும் கோஷங்களுடன் துவங்கப்பட்ட “ரோமானியாவைக் காக்கும் கூட்டமைப்பு ( யூனியன் டு சேவ் ரோனமானியா)” எனும் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான மேனுவெல் காஸ்டெஸ்கு கூறுகையில், ” இனியும் ரோமானியாவில், சர்வாதிகார ஆட்சி நடைபெற முடியாது. மக்கள் விழிப்படைந்துவிட்டனர் ” என்றார்.”

“தற்போது, மக்கள் மிகுந்த பொறுப்புடன் உள்ளனர். தங்களின் கோரிக்கைகளுக்காக, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வீதிக்கு வந்து போராடத் துணிந்துவிட்டனர். மக்கள் மேயர்களின் வீட்டு வாசலுக்கு வந்து போராடுவதால் அவர்கள் செயல்பட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். உங்களால், உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாது” என்றார் மேனுவெல் காஸ்டெஸ்கு.