மும்பை: விராத் கோலி ஓய்வில் இருக்க முடிவு செய்திருப்பதால், மேற்கிந்திய தீவுகளில் பங்கேற்கவுள்ள ஒருநாள் மற்றும் டி-20 போட்டித் தொடர்களை ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்யவுள்ள இந்திய அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி போட்டிகள் துவங்குகின்றன.

ஆனால், இந்தப் போட்டித் தொடரில் விராத் கோலி கலந்துகொள்ள மாட்டார் என்றே கூறப்படுகிறது. அவர் ஓய்வுக்குச் செல்லும் நிலையில், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளை தற்போதைய துணைக் கேப்டன் ரோகித் ஷர்மாவே தலைமையேற்று எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், டெஸ்ட் போட்டிகளிலும் விராத் கோலி கலந்துகொள்ளாமல் ஓய்வெடுக்க முடிவுசெய்யும் பட்சத்தில், டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானே செயல்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுதொடர்பான தெளிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

அதேசமயம், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் மகேந்திர சிங் தோனி கலந்துகொள்வாரா? மாட்டாரா? என்பது குறித்த விபரங்களும் இன்னும் வெளியாகவில்லை. மேலும், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து நட்சத்திரம் ஜஸ்ப்ரிட் பும்ராவும் விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.