விசாகப்பட்டணம்: டெஸ்ட்டில் துவக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து உலக சாதனையை செய்துள்ளார் ரோகித் ஷர்மா.
ஆம். இவருக்கு முன்னர் வேறு எந்த பேட்ஸ்மேனும் இந்தச் சாதனையை செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சற்று இழுபறிக்குப் பின்னர் வாய்ப்புப் பெற்ற ரோகித் ஷர்மா, முதன்முதலாக டெஸ்ட் போட்டியில் துவக்க வீரர் என்ற வாய்ப்பையும் பெற்றார்.
அதன்படி, தனது முதல் இன்னிங்ஸில் 176 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒருநாள் போட்டியைப் போல் ஆடி 127 ரன்களையும் அடித்தார். மேலும், ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற பட்டியலிலும் இணைந்துள்ளார்.
இவருக்கு முன்னர் இதை செய்தவர்கள்(ஓபனிங் அல்ல) விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர்(3 முறை), ராகுல் டிராவிட்(2 முறை) விராத் கோலி மற்றும் ரஹானே ஆகியோர்.
மேலும், ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் விளாசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் இவர் செய்துள்ளார். இவர் இந்தப் போட்டியில் அடித்தது மொத்தம் 13 சிக்ஸர்கள். முதல் இன்னிங்ஸில் 6ம், இரண்டாவது இன்னிங்ஸில் 7ம் அடித்திருந்தார். பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் 12 சிக்ஸர்கள் அடித்து இதற்குமுன்னர் சாதனை செய்திருந்தார்.