டில்லி:
ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ரோஹிங்கியாஸ் சமூகத்தை சேர்ந்த முகமது சலிமுல்லா, முகமது ஷகீர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதல் ரோஹிங்கியா அகதிகளுக்கு கல்வி மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க கடந்த 7ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கல்வில்கர், சந்திரசுத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதற்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.
‘‘இந்தியர்கள் மற்றும் வெளியில் இருந்து வருபவர்கள் என்று கல்வி மற்றும் சுகாதாரத்தில் வேறுபாடு பார்க்க முடியாது’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். முன்னதாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் ரோஹிங்கியா இஸ்லாமியர்களின் முகாம்கள் குறித்த விபரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.