தூத்துக்குடி: குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணி இன்று  பூமி பூஜையுடன் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினம் பகுதியில் இந்திய விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவு செய்து, அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அங்கு ராக்கெட் எவுதளம் அமைப்பதற்கான பணி இன்று பூமி பூஜையுடன்   தொடங்கி உள்ளது.

குலசேகரபட்டினம் ராக்கெட் எவுதளம் அமைப்பது தொடர்பாக,  கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடி ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டினார். அதே நாளில் ரோகிணி 6H 200 சிறிய வகை ராக்கெட்டை திட்டமிட்டபடி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை செய்தது.

இதைத்தொடர்ந்து, சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு இன்று (2025 மார்ச் 05) பூமி பூஜையுடன்  ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கி உள்ளது.

ஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. விண்வெளி திட்டங்களில் தொடர்ந்து இஸ்ரோ வெற்றிக்கொடி நாட்டுவதால் பல நாடுகளும், இஸ்ரோ வாயிலாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த ஆர்வம் காட்டுகின்றன. இதற்காக கூடுதல் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்து, நாடு முழுதும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் நடத்தியது.

அதன் அடிப்படையில், காற்றின் வேகம் குறைவு, மழைப்பொழிவு குறைவு, புவி வட்ட பாதைக்கு மிக அருகில் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் குலசேகரன்பட்டினம் தேர்வானது.  திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது. இஸ்ரோ தலைவராக கே. சிவன் பொறுப்பில் இருந்தபோது இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.  குலசேகரப்பட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. தொடர்ந்து நிலம் கையகப்படுத்த மாநில அரசு உத்தரவிட்டது.

குலசேகர பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களான அமரா புரம், கூடல் நகர், அழகப்புரம், மாதவன் குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 2,230 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தற்போது ராக்கெட் ஏவுவதற்கான தளம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணி ஓராண்டுக்குள் முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.