ஒரே நொடியில் ஒரு கட்டுரையை எழுதி அசத்திய சீன ரோபோ நிருபர்

Must read

ஒரே நொடியில் ஒரு கட்டுரையை எழுதி அசத்திய சீன ரோபோ நிருபர்

மனிதர்களுக்கு மாற்றாக எந்திரங்களையும், எந்திர மனிதர்களையும் தொழிற்சாலைகளில் நிறுவும் முறை தற்போது உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தொழிலாளர்களுக்கு பதிலாக தானியங்கி ரோபோக்களை நிறுவி அதன் மூலம் வேலையை எளிதாக்கும் புதிய முறையும் பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பத்திரிகைத் துறையும் அதற்கு விதிவிலக்கல்ல.

சியாவ் நான் எனும் ஒரு ரோபோ பத்திரிகையாளர், சீன தினசரி நாளிதழ் ஒன்றில், 300 எழுத்துக்கள் நீளமுள்ள ஒரு கட்டுரையை ஒரே நொடியில் எழுதி சாதனை படைத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சீனாவில் உள்ள குவன்சௌவைச் சார்ந்த தெற்கு மெட்ரோபோலிஸ் எனும் தினசரியில் வெளியிடப்பட்ட இக்கட்டுரையில் வசந்த விழா பயண நெரிசலைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய ரோபோக்களை ஆராய்ந்து உருவாக்கி வரும் குழுவை தலைமைத் தாங்கும் பீகிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வான் சியாவ்ஜுன் சீனா டெய்லியிடம் அளித்த பேட்டியில், அந்த கட்டுரையின் ஆசிரியர், சியாவ் நான் என்ற ரோபோ, அதை எழுதி முடிக்க ஒரு நொடி மட்டுமே எடுத்துக் கொண்டதாகவும், அது மட்டுமல்லாமல் சிறுகதைகள் மற்றும் நீண்ட அறிக்கைகளும் அவரால் எழுத முடியும் என்றார்.

“மற்ற ஊழியர்களான செய்தியாளர்களுடன் ஒப்பிடும் போது, சியாவ் நானிடம் வலுவான தரவு பகுப்பாய்வு திறன் உள்ளது, மேலும் அது விரைவாக கதைகள் எழுதுவதில் மிகவும் கில்லாடியாய் உள்ளது,” என்று அவர் கூறினார். “ஆனால், செய்தியாளர்களுக்குப் பதிலாக அறிவார்ந்த ரோபோக்களை முழுமையாக பணியமர்த்த முடியும் என்று அர்த்தம் ஆகிவிடாது” என்று சியாவோஜுன் ‘கூறினார். ஆனால் இந்த ஆய்வுகள், அரசு நடத்தும் ஊடகங்களின் ஊழியர்களிடையே அவர்கள் வேலைகளை இழக்க கூடும் என்ற கவலையை ஏற்படுத்தி வருகின்றது.

தற்போது உள்ள தொழிற்நுட்பப் படி , ரோபோக்களால், நேருக்கு-நேர் நேர்முக பேட்டி எடுக்க இயலாது, அடுத்தடுத்த கேள்விகளுக்கு உள்ளுணர்வுடன் பதிலளிக்க முடியாது, மற்றும் ஒரு பேட்டியிலிருந்தோ அல்லது உரையாடலிலிருந்தோ செய்திக்கான கோணத்தைத் தேர்வு செய்யும் திறன் ரோபோக்களிடம் இல்லை என்றும் சியாவோஜுன் கூறினார். “ஆனால் ரோபோக்கள், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள், நூலாசிரியர்கள் மற்றும் நிருபர்களுக்கு உதவியாக இருந்து செயல்பட முடியும்,” என்று அவர் உறுதிப்பட கூறினார்.

இவ்வாறு ரோபோக்கள் களமிறக்கப் பட்ட மற்ற சம்பவங்கள் சில கீழே தொகுக்கப் பட்டுள்ளன.

ஒலிம்பிக் நடைபெற்ற பிரேசிலில் வாஷிங்டன் போஸ்ட் எனும் பத்திரிகை, தனது ரோபோ நிருபர் குழுவை களமிறக்கியுள்ளது. இதுதவிர ஹெலியோக்ராப் என்ற பெயரிலான ரோபோ நிருபர்களையும் வாஷிங்டன் போஸ்ட் களமிறக்கியது. அவை டிவிட்டர், பேஸ்புக், லைவ் பேஜ் போன்றவற்றில் அவ்வப்போது பதக்க பட்டியல் குறித்த விவரங்களை நேரடியாக அப்லோடு செய்தன ரோபோக்கள்.

சீனாவில் பிரபலமான டிவி சேனல் சாங்காய் டிராகன் டிவி. இந்த டிவியில் வானிலை அறிவிப்புகள் வழக்கமாக தொகுப்பாளர்களைக் கொண்டு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பெண் ரோபோ ஒன்றை 2015ம் ஆண்டு பணியமர்த்தியது.

ஜப்பான் நாட்டில் சாஃப்ட் வங்கியில் (soft Bank) பணிபுரிவதற்காக, அக்டொபர் 2016 ல் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சென்னை, தி.நகர், சிட்டி யூனியன் வங்கி கிளையில், விரைவில் ரோபோ அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரோபோக்களை பணியமர்த்துவதில் உள்ள ஆபத்து :
– ரோபோக்களின் அதிகரிப்பால் அடுத்த 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் குறைய வாய்ப்புள்ளதாக உலக பொருளாதார மன்றத்தின் ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது

– ஹரியானா மாநிலத்தில், குர்கான் அருகே மானேசரில் உள்ள கார் பாகங்கள் தயாரிக்கும் எஸ்.கே.ஏ என்ற தொழிற்சாலையில் வெல்டிங் செய்வதற்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆகஸ்ட் 2015ல், ரோபோ வெல்டிங் பணியில் ஈடுபட்டிருக்கும் போது உலோக தகடு நகர்ந்ததால், அதனை சரி செய்ய ஜி.ராம் என்ற 24 வயது தொழிலாளி முயன்றபோது , ரோபோவின் அதிக மின்சாரம் பாயும் வெல்டிங் குச்சியால் அவர் வயிற்றில் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

ஜெர்மனியில் உள்ள பிரான்க்பர்ட் நகரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பவ்னடாலில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் வாகன தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. அந்த தொழிற்சாலையில் 22 வயது நபர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். அவர் ரோபோவை உருவாக்கும் குழுவில் இருந்தார். கடந்த ஜூலை 2015ல் அவரை ரோபோ ஒன்று பிடித்து மெட்டல் பிளேட்டுடன் வைத்து அவரை நசுக்கி கொலை செய்தது.

மக்கள்தொகை அதிகமுள்ள இந்தியா போன்ற நாடுகளில் ரோபோக்கள் பணியமர்த்தப் படுவது, வேலைவாய்ப்பின்மையை உருவாக்கும். அதேவேளையில், மனிதஉயிருக்கு ஆபத்தான பணிகளில் ரோபோக்களை பணியமர்த்துவது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக, பாதாள சாக்கடை, கழிப்பறை சுத்தம் செய்யும் பணிகளில் ரோபோக்கள் பணியர்த்தப்பட்டு மனித உயிர்கள் காக்கப் படவேண்டும்.

More articles

Latest article