இந்திய அணிக்காக 46 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 12 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற ராபின் உத்தப்பா அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

2007 ம் ஆண்டு டி-20 உலக கோப்பை வென்ற இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்த ராபின் உத்தப்பா கர்நாடகா அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

2021 – 22 ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா நேற்று தனது ஓய்வை அறிவித்தார்.

“எனது நாட்டுக்காகவும், எனது மாநிலத்திற்காகவும் கிரிக்கெட் விளையாடியதை கவுரவமாக கருதுகிறேன். எப்படியும், எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்தாக வேண்டும். நன்றி கொண்ட இதயத்துடன் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து ஃபார்மெட்டில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். அனைவருக்கும் நன்றி” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ள உத்தப்பா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

36 வயதான ராபின் உத்தப்பா-வின் இந்த அறிவிப்பின் மூலம் இனி அவர் வெளிநாட்டு அணிகளுக்காக லீக் போட்டிகளில் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.