சேலம்: கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சேலம் ஆட்சியர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார். அதுபோல எற்காட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பிவிட்டதால், அங்கிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்  கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வர வாய்ப்புள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் கவனமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.

தற்போது, மேட்டூர் அணையிலிருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள கல்வடங்கம், காவேரிப்பட்டி, அண்ணமார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அண்ணமார் கோவில் பகுதியில் உள்ள சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் 10க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் திறக்கப்பட்டுள்ளதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமமான அளக்குடியில் மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்ந்து இன்று 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் வர கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலை மேடு திட்டு, வெள்ளமணல், நாதல் படுகை ஆகிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் வந்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதுபோல ஏற்காட்டில் இன்று காலை முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிகிறது. இந்த நிலையில் ஏற்காட்டில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாகலூர் கிராமத்தில் மரப்பாலம் என்ற பகுதியில் சிறிய ஓடை ஒன்று உள்ளது. இந்த ஓடையில் நீர்வரத்து அதிகரிப்பால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

நாகலூர் என்ற பகுதியில் காற்றாற்று வெள்ளத்தால் ஊருக்குள் மழை நீர் புகுந்து சாலையில் வாகனங்கள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். சாலையில் நிறுத்திவைப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் அடித்து சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த மழையின் காரணமாக கட்டிட வேலைகள் மற்றும் காபி தோட்ட வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால், பொதுமக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். , ஓடைகளில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுவதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.