சென்னை

சென்னையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் அகற்றப்பட்டன.

போக்குவரத்து காவல்துறைக்குச் சென்னை வேளச்சேரி விஜயநகர் பகுதியில் இருந்து தரமணி நோக்கிச் செல்லும் 100 அடி சாலையில், சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் புகார்கள் வந்தன.

எனவே சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையர், அடையாறு காவல்துறை துணை ஆணையர் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து வேளச்சேரி விஜயநகரில் இருந்து தரமணி வரை 100 அடி சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த தள்ளு வண்டிகள், பெட்டி கடைகள் என 50-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த மரப்பலகைகளை அப்புறப்படுத்தினர்.

கோயம்பேடு பகுதியில் தென் மண்டல போக்குவரத்து துணை ஆணைஅய்ர் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் 100 அடி சாலை, அண்ணா வளைவு முதல் அரும்பாக்கம் வரையிலான பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த வியாபாரிகளை எச்சரித்தனர். சாலையை ஆக்கிரமித்து கடைகளின் முன்புறம் வைத்திருந்த பொருட்களையும் அகற்றினர்.

இதைப்போல் வண்ணாரப்பேட்டை சிமெண்ட்ரி சாலையின் இருபுறமும் ஜவுளி, ரெடிமேட் ஆடைகள் என மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் அதிக அளவில் உள்ளதால்  பண்டிகை காலங்களில் மட்டுமின்றி எந்நேரமும் குறைந்த விலைகள் துணிகள் வாங்க அதிகளவில் பொதுமக்கள் வந்து செல்வார்கள்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் பலர் சாலையோரம் நடைபாதையை ஆக்கிரமித்துக் கடை அமைத்து இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சிக்குப் புகார்கள் வந்தது.

எனவே ராயபுரம் மண்டலம் 51-வது வார்டு பொறியாளர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சாலையின் இருபுறமும் எல்லை வகுத்து கயிறு கட்டி அந்த கயிற்றுக்கு வெளியே கடை அமைக்க கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.