சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்றே கடைசி நாள். அதையொட்டி இன்று ஒரே நாளில் 90 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 21ந்தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 27ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்.
ஏற்கனவே பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் டிடிவி தினகரன் உள்பட சில சுயேச்சை கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், கடைசி நாளான இன்று பாஜக சார்பில் கரு.நாக ராஜன், நடிகர் விஷால், ஜெ.தீபா உள்பட 90 சுயேச்சைகள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இன்று 110 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்ய காத்திருந்த நிலையில், 90 வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடிந்தது.
வேட்புமனு தாக்கல் செய்ய மாலை 4 மணி வரை மட்டுமே நேரம் என்பதால், வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு காலையில் இருந்தே டோக்கன் வழங்கப்பட்டது.
டோக்கன் வாங்கியவர்கள் மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி மொத்தம் 90 சுயேட்சைகள் இன்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இன்றைய வேட்புமனு தாக்கலின்போது நடிகர் விஷாலுக்கு 68வது டோக்கனும், தீபாவுக்கு 91வது டோக்கனும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
நாளை வேட்புமனு பரீசீலனை நடைபெற உள்ளது. மனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 7 ம் தேதி கடைசி தேதியாகும். அன்று மாலை, இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தல் கமிஷனால் வெளியிடப்பட உள்ளது.