சென்னை:
தற்போது தமிழகத்தின் பார்வை முழுதும் ஆர்.கே.நகர் தொகுதியை நோக்கி இருக்கிறது. வரும் டிசம்பர் 21ம் தேதி அங்கு இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது.
முக்கிய கட்சிகள் அனைத்தும் களத்தில் இறங்கி தீவிரமாக வாக்கு சேகரிக்க ஆரம்பித்திருக்கின்றன. அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். தி.மு.க. சார்பில் மருது கணேஷ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கரு.நாகப்பன் களத்தில் இறங்கியிருக்கிறார். டி.டி.வி. தினகரன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
கடந்த 2016ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதி நிலவரம் என்ன?
அப்போதைய நிலவரப்படி, ஆர்.கே.நகர்த் தொகுதி மொத்த வாக்காளர்களாக 2 லட்சத்து 55 ஆயிரத்து 198 பேர் இருந்தனர். அவர்களில் ஆண்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 881 பேரும், பெண்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 229 பேரும், திருநங்கைகள் 88 பேரும் இருந்தனர்.
ஜெயலலிதா உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஜெயலலிதா போட்டியிட்டதை அடுத்து முக்கிய கட்சிகள் பெண் வேட்பாளர்களையே நிறுத்தின.
சிம்லா முத்துச்சோழன் (தி.மு.க.), வசந்திதேவி (வி.சி.- மக்கள் நலக்கூட்டணி), பி. ஆகினேஸ் (பா.ம.க.) ஆகியோர் போட்டியிட்டனர். அதோடு ஜெயலட்சுமி, புவனேஸ்வரி, பிரவீன், செல்வராணி ஆகியோர் சுயேட்சையாக களம் இறங்கினர். தேவி என்கிற திருநங்கை நாம் தமிழர் கட்சி சார்பாக களம் இறக்கப்பட்டார். இதர வேட்பாளர்கள் ஆண்கள்.
தேர்தல் முடிவில், ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அடுத்தடுத்த இடங்களை சிம்லா முத்துச்சோழன் (திமுக) 57,673 ,வசந்திதேவி (வி.சி.) 4195 , பி. ஆகினேஸ், (பா.ம,க) 3011, எம்.என். ராஜா (பாஜக) 2928 ஆகியோர் பிடித்தனர்.
அடுத்த இடத்தை நோட்டா பெற்றது. மொத்தம் 2865 வாக்குகள். இதற்கு அடுத்தபடியாக நாம் தமிழர் வேட்பாளர் தேவி 2513 வாக்குகளைப் பெற்றார். இதற்கு அடுத்த இடங்களை சுயேட்சைகள் பெற்றனர்.
இதுதான் 2016ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகரில் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்.