சென்னை:
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பரபரப்பு மட்டுமல்ல.. சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. குறிப்பாக இது வரை நடந்த (இடைத்) தேர்தல்களிலேயே அதிகமான பணம் புழங்கியது இந்தத் தேர்தலில்தான் என்று சாதனை அளவை எட்டியது.
இன்னொரு சாதனையாக இதுவரை இல்லாத அளவுக்கு 77 சதவிகித்த்துக்கும் மேல் வாக்குப்பதிவு ஆகியிருக்கிறது.
மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்திய துணைராணுவப் படையினர் மற்றும் சென்னை மாநகர காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சீல் வைத்து வாக்குப் பெட்டிகள் வைத்துள்ள அறைக்குள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 வாக்குச்சாவடிகளின் பெட்டிகள் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி மொத்த வாக்குகளையும் 18 முழு சுற்றுக்கள், ஒரு அரை சுற்று என மொத்தம் 19 சுற்றுக்களில் எண்ணப்படும்.
வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். வெப் காஸ்டிங் மூலமும் கண்காணிக்க முடியும்.
“ஆகவே முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. தேர்தலை அமைதியாக நடத்தி முடித்தது போலவே வாக்கு எண்ணிக்கையும், நேர்மையாக நியாயமாக நடக்கும். முகவர்கள், வேட்பாளர்கள் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் அறையை பார்வையிடலாம். அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்யப்படுவதால், முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை” என்று தேர்தல் அதிகாரி கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். சிறிது நேரத்திலேயே முன்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற நிலவரம் தெரியவரும்.
பத்து மணி சுமாருக்கு வெற்றியாளரை கிட்டதட்ட உறுதி செய்து விட முடியும்.
மதியத்துக்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.