சென்னை,
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 8ந்தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் இருந்தும் வெளிநடப்பு செய்த டிடிவி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏற்கனவே என்னுடன் எடப்பாடி இருந்தபோது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
இன்று 4வது நாளாக சட்டசபை கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பியதால் பேச சபாநாயகர் அனுமதிக்க மறுக்கிறார் என்று வெளிநடப்பு செய்த டிடிவி தினகரன் இன்றும் வெளிநடப்பு செய்தார்.
பின்னர் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறிய சபாநாயகர், இறுதியில் வாய்ப்பு அளிக்கவில்லை என்றும், சட்டப்பேரவையில் ஆர்..கே.நகர் தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து பேச இருந்தேன். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்வதாகவும் கூறினார்.
அதைத்தொடர்ந்து ஆர்கே நகர் தொகுதி மக்களின் கோரிக்கைகள் என்னவென்று வரிசையாக வாசித்தார்.
1. ஆர்.கே.நகரில் சொந்த வீடு இல்லாத 57 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்.
2. கைலாச முதலி தெருவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டித்தரப்பட வேண்டும்.
3. தண்டையார் பேட்டையில் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைத்து தர வேண்டும்.
4. ஸ்டான்லி மருத்துவமனை நவீன படுத்தப்பட வேண்டும்.
5.10 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்க வேண்டும்.
6. உலகதரம் வாய்ந்த உடற்பயிற்சி கூடம்.
7. நவீன குப்பை சேகரிக்கும் மையம்.
. ஐஓசி பேருந்து நிறுத்தத்தை பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும்.
9. 10 ஏக்கர் நிலப்பரப்பில் மயான பூமி
10. பாதாள சாக்கடை இணைப்பு
11. மீன் மார்க்கெட்டை நவீன வசதி செய்ய வேண்டும்.
12. மீன் அங்காடி அமைத்திட வேண்டும்.
13. பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
14. கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் புதிய சுரங்கப்பாதை
15. முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கு முறையாக பென்ஷன் வழங்க வேண்டும்.
இவை அனைத்தும் ஏற்கனவே நானும் எடப்பாடியும் ஆர்.கே.நகர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிதான் எனவும், இவற்றை செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
ஜெ.மறைவை தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வாக்குப்பதிவு நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த தேர்தலில் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக எடப்பாடி தலைமையிலான அரசு செயல்பட்டு வந்தது. ஓபிஎஸ் தனி அணியாக இருந்தார். பின்னர் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த தேர்தலின்போது டிடிவியுடன் எடப்பாடியும் சேர்ந்து தேர்தல் பிரசாரம் செய்தபோது, இந்த வாக்குறுதி பிரிண்ட் செய்யப்பட்ட நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.